Skip to main content

எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம்  காலமானார்! 

Published on 24/10/2022 | Edited on 24/10/2022

 

Writer B. Jayaprakasam passed away!

 

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான பா. ஜெயப்பிரகாசம் வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக விளாத்திகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

 

தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் முன்னாள் இணை இயக்குனரும், சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்தும் எழுதியுள்ளார். இந்நிலையில், எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம் வயது முதிர்ச்சி மற்றும் உடல் நல குறைவு காரணமாக விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (23ம் தேதி) மாலை காலமானார். 

 

மறைந்த பா. ஜெயப்பிரகாசம்  தன்னுடைய மாணவப் பருவத்தில் 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார். அதன் காரணமாக இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் மூன்று மாதங்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார்.

 

1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும், 1971ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை  இணை இயக்குனராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பா. ஜெயப்பிரகாசம். கல்லூரி நாட்களில் இருந்து இவர் சிறந்த பேச்சாளராக திகழ்ந்துள்ளார். பல இலக்கிய மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் அரசியல் அரங்குகளிலும் இவர் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

 

கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் என இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. மன ஓசை என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும், தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். 

 

ஆய்வு மாணவர்கள் சிலர் இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அதில்  பா.ஜெயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் என்ற ஆய்வும், பா. ஜெயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும் என்கிற மற்றொரு ஆய்வும் குறிப்பிடத்தக்கது. 

 

மறைந்த எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம், தனது மறைவுக்குப் பிறகு எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி நாளை (25ம் தேதி) நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் பின்பு அவரது உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Sahitya Akademi award announcement for writer Devibharathi!

24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சால்வை மற்றும் செப்புப் பட்டயம் ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறுவோர் பட்டியல் இன்று (20.12.2023) டெல்லியில் வெளியிடப்பட்டது.

அதன்படி தமிழ் மொழியில் வெளியான ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் தேவிபாரதி ஆவார். ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்துறையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான விருது மற்றும் பரிசுத்தொகை வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சாகித்ய அகாடமி விருதை தனது நீர்வழிப் படூஉம் தமிழ் நாவலுக்காக வென்ற பிரபல எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், “தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதியை மனமார வாழ்த்துகிறேன். நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது. தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் தேவிபாரதி.

சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் போன்ற நாவல்களில் தன் மக்களின் எழுத்துச் சித்திரத்தை சுவாரசியம் குன்றாமல் வரைந்தார். சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் அவர் எழுதியிருக்கும் புதினமான நீர்வழிப் படூஉம் என்னும் படைப்புக்கு விருது கிடைத்திருப்பது வாழ்த்துக்குரியது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு!

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

writter udhayshankar yuva purashkar won award

 

எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய புரஸ்கார் விருது மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் விருதுகள் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் இலக்கியத்துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அந்த வகையில் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ’ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்கு பால சாகித்ய புராஸ்கார் விருதும், எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய ’திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு எழுத்தாளர்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.