'This is the worst betrayal to farmers' - PMK Ramadoss criticizes

'உழவர் சேவை மையங்கள், கோடை உழவுத் திட்டம் வரவேற்கத்தக்கது: பாசனத் திட்டம், கொள்முதல் விலை உயராதது ஏமாற்றம்' என தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை நேற்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டின் நிறை குறைகள் குறித்து பாமக நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்த அறிக்கையில், 'தமிழ்நாட்டில் உழவர்களுக்கு உதவும் வகையில் 1000 உழவர் நலச் சேவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், கோடை உழவு ஊக்குவிக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான பாசனத் திட்டங்களை செயல்படுத்த எந்த திட்டத்தையும் தமிழக அரசு அறிவிக்காதது பெரும் ஏமாற்றமளிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத் தான் தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. ஆனாலும் கடந்த நான்காண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தான் திமுக அரசின் கடைசி முழு வேளாண் நிதிநிலை அறிக்கை என்பதால், இதிலாவது பயன் கிடைக்கும் வகையில் ஏதேனும் திட்டங்கள் அறிவிக்கப்படுமா? என்று தமிழக உழவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையிலும் ஓரிரு திட்டங்களைத் தவிர விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Advertisment

தமிழ்நாட்டில் வேளாண் பட்டதாரிகளுக்கு, உழவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் 1000 இடங்களில் உழவர் நலச் சேவை மையங்கள் அமைக்கப்படும்; ரூ.20 லட்சம் வரையிலான மதிப்பில் இந்த மையங்களை அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதுடன், உழவர்களுக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகள் கிடைக்கும். வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் நோக்குடன் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என்று பல ஆண்டுகளாக வேளாண்மை நிழல் நிதிநிலை அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது. உழவர்களுக்கு பயனளிக்கும் வகையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்வடிவம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல், வேளாண்மை சிறப்பாக நடைபெறும் நாடுகளுக்கு உழவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டமும் பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை தான். அத்திட்டமும், கோடை உழவு செய்யும் உழவர்களுக்கு எக்டேருக்கு ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் உழவர்களுக்கு பயனளிக்கக் கூடியவை ஆகும். ஆனால், இத்திட்டத்தின்படி உழவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மிகவும் குறைவு ஆகும். ஏக்கருக்கு ரூ.800 ஊக்கத்தொகையை வைத்துக் கொண்டு உழவர்களால் எதையும் செய்ய முடியாது. எனவே, கோடை உழவுக்கான மானியத்தை குறைந்தது ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்ல் கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், கரும்புக்கான ஊக்கத்தொகையை டன்னுக்கு 215 ரூபாயிலிருந்து 349 ரூபாயாக உயர்த்தியதைத் தவிர தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் கரும்புக்கு ரூ.4000 வீதமும், சத்தீஸ்கர் மாநிலத்தில் நெல்லுக்கு ரூ.3120 வீதமும் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உழவர்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும், இந்த மாநிலங்கள் அளவுக்காக கொள்முதல் விலைகளை தமிழக அரசு உயர்த்தி வழங்கியிருக்கலாம். ஆனால், அதைக் கூட செய்ய முன்வராததன் மூலம் உழவர்களுக்கு மிக மோசமான துரோகத்தை திமுக அரசு செய்துள்ளது.

துவரை போன்ற பருப்பு வகைகளின் சாகுபடியையும், எண்ணெய் வித்துகளின் சாகுபடியையும் ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனற பாமகவின் யோசனை ஏற்கப்பட்டிருக்கிறது என்றாலும், அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை போதுமானதல்ல. வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்காக சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.

ஆனால், வேளாண் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான பாசனத் திட்டங்கள் குறித்து வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. வேளாண்துறைக்கு வெறும் ரூ.15,230 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் அரை விழுக்காட்டுக்கும் குறைவு (0.41%) ஆகும். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 3.5% மட்டுமே வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த பிற துறைகளுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.45,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிதிநிலை அறிக்கை மதிப்பில் 10.60% மட்டும் தான். வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்த நிதிநிலை அறிக்கையின் மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவு ஆகும். ஒட்டுமொத்தத்தில் வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கை தெளிவு படுத்துகிறது' என தெரிவித்துள்ளார்.