
தனது கொள்கைப்படி ஒருவர் தாராளமாக வாழ்ந்துகொள்ளலாம். அதுபோலவே, அதற்கு மாறான கொள்கையுடன், நம்பிக்கையை ஒரு பிடியாக வைத்துக்கொண்டு, மற்றவர்களும் வாழலாம். இந்தக் கொள்கையும் நம்பிக்கையும், புரிதல் இல்லாதவர்களால் அவ்வப்போது உரசிக்கொள்கின்றன. விமர்சனத்துக்கும் ஆளாகின்றன. அப்படி நடந்துவரும் அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்!

கலைஞர் உடல் நலிவுற்றிருந்தபோது, திமுக தொண்டர்கள் சிலர் கூட்டு இறைவழிபாடெல்லாம் நடத்தினார்கள். அப்போது, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ‘கலைஞரை மதிப்பது, அவர் கட்டிக்காத்த கொள்கையை மதிப்பதே ஆகும். மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையால் கலைஞர் நலம்பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபட வேண்டாம்.’ என்று கேட்டுக்கொண்டார்.

பகுத்தறிவுக் கொள்கையை முழுமூச்சாகக் கடைப்பிடித்துவருபவர் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி. கரோனா தொற்றிலிருந்து அவர் மீண்டுவர இறைவனைப் பிரார்த்திப்பதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கமல்ஹாசனும் இறைமறுப்பு கொள்கையில் உறுதியாக உள்ளவர். அவர் பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். திருவொற்றியூரிலோ, மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர், எல்லையம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று பாலபிஷேகம் நடத்தினர்.

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நம்பியூரில் அரசு பள்ளி வகுப்பறையின் கரும்பலகையில் பேனர் கட்டி, திமுகவினர் சிலர் பூஜை செய்துள்ளனர்.
தங்களின் மீதான அன்பால் சிலர் பிரார்த்தனை செய்ததிலோ, பாலாபிஷேகம் நடத்தியதிலோ, பூஜை செய்ததிலோ, கி.வீரமணிக்கோ, கமல்ஹாசனுக்கோ, உதயநிதிக்கோ சிறிதும் உடன்பாடு இருந்திருக்காதுதான். ஆனாலும், சம்பந்தப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டு, ‘தலைவர்களின் கொள்கை காற்றில் பறக்கிறதே!’ என்று நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றனர்.
‘கடவுள் நம்பிக்கை இல்லை’ என்ற கொள்கை உள்ளவர்களும்கூட, அந்தக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்களே! ஒருவருடைய வாழ்க்கையில் நம்பிக்கையானது மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. இறைவழிபாடு நடத்துபவர்களுக்கோ, அந்த நம்பிக்கை பிரார்த்தனைக்கு அழைத்துச் செல்கிறது. பிரார்த்தனைதான், தங்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் நற்பண்புகளை வளர்ப்பதற்குமான பிரதான கருவி என்பதில், அவர்களும் உறுதியாக இருக்கின்றனர். பொதுவாக நம்பிக்கை என்பது, தங்களுக்குத் தேவையானது கிடைக்கும் என்ற புரிந்துணரலே ஆகும்.