/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2990.jpg)
முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆதிதிராவிடர் நல விடுதியில் உண்ணும் உணவில் புழு இருந்ததால் மாணவர்கள் கொந்தளிப்பு.
சென்னை இராயபுரம் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர் ஆதிதிராவிடர் நல விடுதியில் 153 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்துள்ளது. இதைக் கண்ட மாணவர்கள் உடனடியாக சமையல் செய்பவரிடம் சுட்டிக் காட்டியுள்ளனர். அதற்கு எங்களுக்கு என்ன தெரியும், வார்டன் கொடுப்பதை நாங்கள் சமைத்துக் கொடுக்கிறோம்என்று பதில் கொடுத்துள்ளார். மறுநாள் காலையில் வார்டன் ராதிகா வந்தவுடன் உணவில் புழு இருக்கிறது என்று கேட்டதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் சென்றுள்ளார்.
அதேசமயம், இந்த விவகாரம் ஆதிதிராவிடர் ஆணையருக்குத்தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அதிகாரிகளை அந்த விடுதிக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, ‘உணவு மட்டும் பிரச்சனை இல்லை. கட்டிடம் தரமற்று கிடக்கிறது. கழிவறையும் சுத்தம் செய்வதில்லை. மெனு போர்டில் உள்ள உணவை போடுவதில்லை. இந்த விவகாரங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டனையும் மாற்ற வேண்டும்” என்றனர்.
இது குறித்து வார்டன் ராதிகாவிடம் கேட்ட போது, “அவரைக்காயில் இருந்த புழு, கவனக்குறைவால் சமைக்கும்போது உணவில் வந்துள்ளது. துறை ஆணையருக்கு விவரம் சென்று அவர் விசாரிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மெனுவின்படிதான் உணவு கொடுத்து வருகிறோம். மாணவர்கள் குறை கூறினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறேன்” என்றார். இது குறித்து ஆதிதிராவிடர் ஆணையர் மதுமிதாவிடம் கேட்ட போது, “உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)