This world will not run without workers says  Ramadoss

உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாமக நிறுவனர் ராம்தாஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14 ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.

Advertisment

இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள் பாட்டாளிகள் தான். உலகின் ஆக்கும் சக்தி பாட்டாளிகள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம், இந்த மாநிலம் இயங்காது. இதற்கு காரணமான பாட்டாளிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆனால், உழைக்கும் பாட்டாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பது தான் உண்மை. அரசுத் துறைகளில் நிலையான பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக ஒழிக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையிலும், குத்தகை அடிப்படையிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை.

Advertisment

ஒவ்வொரு நாளும் மே முதல் நாளில் பாட்டாளிகள் நாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்பது தான். இதை மனதில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக போராடுவதற்கு இந்நாளில் பாட்டாளிகள் அனைவரும் உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.