workers traveling again to their native

கரோனா வைரஸ் தாக்கம் கடந்த வருடம் தொடங்கியபோது அதை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் அறிவித்த பொது முடக்கத்தால் மக்களின் வாழ்க்கையும் முடங்கிப் போனது. தொழிற்சாலைகள் மூடப்பட்டது, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, உழைப்பு இல்லை, ஊதியம் இல்லை, அதனால் உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளானர்கள்.

Advertisment

இப்போது அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த வருடம் தமிழம் முழுவதும் தங்கியிருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களின் குடும்பத்துடன் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிச் சென்றனர். போக்குவரத்து தடையால் பலர் கால்நடையாகவே நடந்து சென்றனர். அதன்பிற்கு கரோனா வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியதாக அரசு அறிவித்து கட்டுப்பாடுகளை தளர்த்தி ரயில், பேருந்து என பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

Advertisment

சொந்த மாநிலத்திற்குச் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வந்து வேலை செய்து வந்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். பலரும் அவர்களின் குடும்பத்துடன் வந்து இங்கேயே தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கானோர் இருககிறார்கள். அதே போல் சென்னிமலை, பெருந்துறை, பவானி, கோபி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுக்கவே பல பகுதிகளில் தீவன ஆலைகள், கட்டிட வேலை, ஹோட்டல்கள், சாலை பணிகள் சாய தோல் தொழிற்சாலை, செங்கல் சூளை, கட்டுமானத் தொழில் எனப் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

கரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்ததோடு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை பொது முடக்கம் எனக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துவிட்டது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக தினசரி கரோனா வைரஸ் பாதிப்பு என்பது நூறு பேர், இருநூறு பேர் என எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதின் தொடர்ச்சியாக மீண்டும் முழு பொது முடக்கம் வரப்போகிறது என்ற அச்சம் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல தொடங்கி விட்டனர். ஈரோடு ரயில் நிலையத்தில் ஓரிரு நாட்களாக நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்குப் பயணமாகின்றனர். இதனால் ஈரோடு ரயில் நிலையம் பரபரப்பாகக்காணப்படுகிறது. தொடர்ந்து வட மாநிலப்புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வதால் ஈரோட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்ற தொழிலாளர்கள் இல்லாமல் முழுமையாக முடங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.