
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றில் பல ஆயிரக்கணக்கான ஆண், பெண் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும், தினக்கூலி பணியாளர்களாகவும்பணி செய்துவருகிறார்கள். இவர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றில் தெருக்களில் தூய்மைப் பணியில் ஈடுபடும்போது அங்கிருக்கும் குப்பைகளைச் சேகரித்து வாகனங்களில் கொண்டு சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி அதைத் தரம் பிரிக்கிறார்கள்.
மக்கும் குப்பை, மக்காத குப்பை இப்படி தரம் பிரிக்கும் பணிக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. இதிலும் தூய்மைப் பணியாளர்கள் பலர் வேலை செய்துவருகிறார்கள். அப்படிப்பட்ட பணியில் வேலை செய்துவந்த ஒரு தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்டது சஞ்சீவிராயன் பேட்டை. இந்த ஊரின் ஆறாவது தெருவைச் சேர்ந்த வாசுதேவன் மனைவி சித்ரா, நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவருகிறார்.
இந்த நிலையில், நேற்று (01.07.2021) குப்பையைத் தரம் பிரிக்கும் பணியில் ஆட்கள் குறைவாக இருந்ததால், தனது மகன் ஜனார்த்தனனை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜனார்த்தனன் தரம் பிரிக்கும் பணியில் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவரது கால் இயந்திரத்தின் பெல்டில் சிக்கித் தடுமாறி விழுந்ததில் அவரது தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜனார்தனன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் அந்த இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திண்டிவனம் நகராட்சி தூய்மைப் பணியாளர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)