தூய்மை பணியாளராக பணி செய்து திடீர் மரணத்தை தழுவி, தான் ஒட்டிச் சென்ற குப்பை வண்டியிலேயே பிணமான உடலாக வந்த ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி தினக்கூலி தூய்மைபணியாளர் பாலன் குடும்பத்திற்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

Advertisment

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் கடந்த 13 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மைபணியாளராக பணியாற்றி வந்தவர் என்.பாலன்.46 வயது கொண்ட அவர், சென்ற 6-5-2020 அன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்தார். உடனிருந்த சக தொழிலாளர்கள் அவரை குப்பை வண்டியில் ஏற்றி அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவ பணியாளர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல வாகன வசதியை அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால் அதே குப்பை வண்டியில் ஏற்றி அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.

Advertisment

இறந்த பாலனுக்கு தங்கமணி என்ற மனைவியும், தீனா, சுஜித் என்ற குழந்தைகளும், மாரியம்மாள் என்ற வயதான தாயாரும் உள்ளனர். இவர்கள் இறந்த பாலனின் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். அவரது மறைவால் இக்குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது.

இதனை அறிந்ததும், ஏஐடியுசி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ஊரடங்கு காலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த பாலன் குடும்பத்திற்கு ரூபாய் ஐம்பது லட்சம் இழப்பீடும், அவரது மனைவி தங்கமணிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisment

இந்தநிலையில், தமிழ்நாடு ஏஐடியுசி தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன், பாலன் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த அவரது ஓட்டை வீட்டைபார்த்து வேதனைப்பட்ட சுப்பராயன் பிறகு நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மணிவண்ணனை பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து, மறைந்த பாலனின் மனைவி தங்கமணிக்கு பேரூராட்சியில் நிரந்தர வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மிகவும் பழுதடைந்துள்ள அவரது வீட்டை உடனடியாக புதுப்பித்து தருமாறும் கேட்டுக் கொண்டார். அதோடு விடாமல் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கடிதம் எழுதுவதாகவும் கூறினார்.