
திருச்சி பாலக்கரை ஜெயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (37). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் வியாழக்கிழமை பிற்பகலில் தனது நண்பர்கள் மூவருடன் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, ராஜசேகர் உட்பட 2 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அதில் ஒருவரை அங்கிருந்த சலவை தொழிலாளர்கள் மீட்டனர். ராஜசேகரை காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து, ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ராஜசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணியின்போது, இரும்பு கம்பி குத்தியதில் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அத்துடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை படகு மூலம் கொள்ளிடம் ஆற்றில் தேடியபோது, ராஜசேகர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.