கிருஷ்ணகிரி அருகே, மனைவியையும், அவருடைய ஆண் நண்பரையும் வெட்டிக்கொன்ற வழக்கில் கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே, காமையூரைச் சேர்ந்தவர் லோகேஷ் (28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பகவத்கீதா (24). இவருக்கும், காமையூரைச் சேர்ந்த கணேஷ் (30) என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்து வந்தது.

Advertisment

 Worker gots double life sentence

இதையறிந்த லோகேஷ், தனது மனைவியைக் கண்டித்தார். மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறும் கணேஷையும் எச்சரித்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் தங்களது தொடர்பை தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு, ஏப். 22ம் தேதி பகவத்கீதா, அவருடைய ஆண் நண்பர் கணேஷ் ஆகியோர் தன் வீட்டில் 'நெருக்கமாக' இருந்ததை லோகேஷ் நேரில் பார்த்துவிட்டார். ஆத்திரம் அடைந்த அவர், அவர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றார்.

Advertisment

இந்த இரட்டைக் கொலை வழக்கு குறித்து ராயக்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலையரசி, ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில், வியாழக்கிழமை (நவ. 14) தீர்ப்பு கூறப்பட்டது.

கணேஷ், பகவத்கீதா ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக லோகேஷூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்தத் தவறும்பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜராகி வாதாடினார். தீர்ப்பை அடுத்து லோகேஷ், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.