Work Abroad! Man arrested for cheating many

கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் கம்பன் நகரைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் ஜோசப் ராஜா(44), இவரது மனைவி ராகவ சங்கீதா(32). இவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு வடலூர் ராகவேந்திரா நகரில் குடியிருந்து, பாஸ்டர் (பாதிரியார்) வேலை செய்து வந்தபோது காடாம்புலியூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் புருஷோத்தமன்(32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

Advertisment

இதைப் பயன்படுத்தி அவரை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 10.05.2018 அன்று ரூபாய் 4,90,000 பணம் பெற்றுக் கொண்டு, இதுவரை வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் அலைக்கழித்து வந்துள்ளனர் இத்தம்பதியினர்.

Advertisment

இதுகுறித்து தன்னை மோசடி செய்வதாகக் கூறி புருஷோத்தமன் வடலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வீரமணி மோசடி செய்த ஜோசப் ராஜாவைப் பிடித்து விசாரணை செய்ததில் புருஷோத்தமனிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்ததும், இதேபோல் வேப்பங்குச்சி மணியரசனிடம் ரூபாய் 50 ஆயிரம், பண்ருட்டி ராஜ்கிரணிடம் ரூபாய் 2,50,000, வடலூர் ராகவேந்திரா நகர் பார்த்திபனிடம் 3 லட்சம், நெல்லிக்குப்பம் பாலாஜியிடம் 2 லட்சம் உட்பட 16 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாதிரியார் ஜோசப் ராஜாவைக் கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் உடந்தையாக இருந்த அவரது மனைவி ராகவ சங்கீதாவை தேடி வருகின்றனர்.