Skip to main content

கவரிங் காசுகளைக் கொடுத்து ரூ.50,000 கொள்ளை அடித்த பெண்கள்! 

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

Women who robbed Rs. 50,000

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மனைவி செல்வி(45).  இவரது மகன் அஜித்குமார், மருமகள் பிரீத்தி. 2 மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதனை  தொடர்ந்து தாலி பிரித்து கோர்ப்பதற்காக நகை வாங்க திட்டக்குடி வந்துள்ளனர்.  கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.  அப்போது கடை முன்னால் நின்றுகொண்டு நோட்டமிட்ட இரண்டு பெண்கள் இவர்களுக்கு பின்னாலேயே சென்றனர். 


அதில் ஒரு பெண் தம்மிடம் 15 தங்க காசுகள் இருப்பதாகவும், தனது கணவருக்கு சென்னையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும்,  அதற்காக அந்த தங்க காசுகளை வைத்துக்கொண்டு ரூ.50,000 மட்டும் பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு யோசித்த செல்வி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், நீங்க போட்டிருக்கிற நகையை அடமானம் வைத்து பணம் கொடுங்கள். எனக்கு ரொம்ப அவசரமாக இருக்கிறது. என் கணவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும்  என வலியுறுத்தி கேட்டுள்ளார்.


 
அதனால் மனம் இளகிய செல்வி, தனது நகைகளை அருகிலிருந்த அடகு கடையில் அடமானம் வைத்து 50,000 ரூபாய் பணத்தை வாங்கி அதை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய உடன் அந்த பெண்கள் கையில் வைத்து இருந்த காசுகளை செல்வியிடம் கொடுத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.  


சிறிது நேரம் கழித்து செல்வியின் மருமகள் பிரீத்தி நகையை பார்த்தவுடன் இது கவரிங் நகை என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திட்டக்குடி காவல்துறையினர் கடைவீதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் செல்வியிடம் பேசிக் கொண்டே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதைக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.