Advertisment

இளவட்டக் கல்லைத் தூக்கிய பெண்கள்; களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!

Advertisment

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகிலுள்ள முருகன்குடியில் திருவள்ளுவர் தமிழர் மன்றம் சார்பில் தமிழர்களின் திருநாளான தைத்திருநாள், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. பொருளாளர் மா.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பாளர் ம.விஜய் வரவேற்புரை ஆற்றினார்.

தை முதல் நாள் காலை 6 மணி அளவில் ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துத்தெரிவிக்கப்பட்டது. மாலையில் பொதுப்பொங்கல், வழுக்கு மரம் ஏறுதல், கபாடி,இளவட்டக்கல் தூக்குதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் கலந்து கொண்டதுடன் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்கள் பிரிவில் 35 கிலோ எடையுள்ள உருண்டை வடிவக்கல்லைத்தூக்குவதற்கு இளைஞர்கள் திரண்டனர். இதில் முருகன்குடியைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் இளவட்டக் கல்லைத்தூக்கி தோளில் சுமந்து முதல் பரிசு பெற்றார். பெண்கள் பிரிவிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்று இளவட்டக் கல்லைத்தூக்கினர். இளவட்டக்கல் தூக்கும் போது ஆண்களும்சிறுவர்சிறுமிகளும் திரண்டு கைதட்டி பெண்களை உற்சாகப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, முருகன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் வே.யாழினி, ம.மதிவதினி, ம.பிரியதர்சினி ஆகியோர் வில்லுப்பாட்டு மூலம் தமிழ்தேசியப் பாடல்கள் பாடினர்.

Advertisment

பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் 'உயிர்ம வேளாண்மை' குறித்து மா.கார்த்திகேயன், 'வகுப்புவாரியான இட ஒதுக்கீடு' குறித்து பி.வேல்முருகன், 'முருகன்குடி கிராம வளர்ச்சிக்கு திருவள்ளுவர் தமிழர் மன்றத்தின் பங்கு' குறித்து தி.ஞானபிரகாசம், 'பெண்களுக்கு எதிரான வன்கொடுமை' குறித்து வழக்கறிஞர் மு.செந்தமிழ்ச்செல்வி, 'தற்சார்பு வாழ்வியல்' குறித்து சிலம்புசெல்வி, 'தமிழர் மருத்துவம்' குறித்து ம.கனிமொழி, 'தமிழர் கலைகள்' குறித்து இரா.அன்புமணி, 'மொழி வரலாறு' குறித்து க.தமிழ்நிகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

முன்னதாக நிகழ்ச்சியில் முருகன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கழிவறை வேண்டி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி 35 ஆண்டுக்கால கழிவறை கனவை நனவாக்கிய மாணவிக்கு சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்வினை திருவள்ளுவர் தமிழர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் ஊ.சபாபதி, வே.சுவேந்தர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தி.சோபன்ராசு நன்றி கூறினார்.

pongal Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe