5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி! 

Women who fought with her husband and admitted in hospital

பர்கூர் அருகே, கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த இளம்பெண், தனது 5 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஒன்பது பனைமரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (32). சொந்தமாக கார் வைத்து, வாடகைக்கு இயக்கி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (26). இவர்களுக்கு 11, 8, 6 ஆகிய வயதுகளில் மூன்று பெண் குழந்தைகளும், 4, 2 வயதுகளில் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

மாதேஷ், சரியாக வேலைக்குச் செல்லாமலும், குடும்பச் செலவுகளுக்கு பணம் தராமலும் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மார்ச் 19ம் தேதியன்று, அவர்களுக்குள் மீண்டும் தகராறு வெடித்துள்ளது. ஆத்திரத்தில் மாதேஷ், தன் மனைவியை அடித்துள்ளார். பிறகு, அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

அடிக்கடி தகராறு ஏற்படுவதாலும், கணவரின் போக்கு மாறாததாலும் நிம்மதி இழந்த கவிதா, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். தான் போய்விட்டால் தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆளில்லையே என்று அஞ்சிய அவர், குழந்தைகளையும் கொன்றுவிட தீர்மானித்து இருக்கிறார். இதையடுத்து, எலி மருந்தை வாங்கி வந்த அவர், தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அவர்கள் குடித்த பிறகு, கவிதாவும் குடித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர், தன்னுடைய அண்ணனுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுடன் சிறிது நேரத்தில் கவிதா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு கவிதாவும், குழந்தைகளும் மயங்கிக் கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பர்கூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயே 5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பர்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Krishnagiri
இதையும் படியுங்கள்
Subscribe