
புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககால கோட்டை என கருதப்படும் 1.62 கி.மீ சுற்றளவுள்ள கோட்டையில் தொல்லியல் ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாய்வு செய்து அங்கு கிடைத்த மண் பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்களையும் செங்கல் அளவுகளையும் ஆய்வு செய்து இது சங்ககால கோட்டை என்பதை ஆவணப்படுத்தினார்.
அதன் பிறகு 2013 ம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிஞர் பேராசிரியர் ராஜவேலுவின் அப்போதைய ஆய்வு மாணவரான புதுகை பாண்டியன் தகவலின் பேரில் நீர்வாவி குளத்தில் கிடந்த கல்லை ஆய்வு மாணவர் தங்கதுரை, மற்றும் முதுகலை மாணவர் மோசஸ் ஆகியோர் ஆய்வு செய்த போது 5 வரிகள் கொண்ட தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு மறுநாளே ஆவணத்தில் மாணவர்களின் பெயருடன் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டில் கால்நடைகளை கவர வந்தவர்களை எதிர்த்து போரிட்டு மடிந்த கணம் குமரனுக்காக நடப்பட்ட நடுகல் என்பது தெரிய வந்தது. பிறகு அந்த கல்லை தேடி பலர் வந்தாலும் கூட பாதுகாப்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த கல்வெட்டின் அடிப்படையிலும் சங்ககாலம் என்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2015 ம் ஆண்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் நிறுவனர் ஆசிரியர்மங்கனூர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் கோட்டைக்குள்ளும் வெளியிடங்களிலும் மேலாய்வு செய்த போது இரும்பு உருக்கி ஆயுதங்கள் செய்தமைக்கான இரும்பு உருக்கு கழிவுகளும், இரும்பு உருக்கு உலைகளான சென்னாக்குழிகளும், சுடுமண் அச்சுகளும் கண்டெடுத்தனர். மேலும் பலவகையான பானை ஓடுகளும் கண்டெடுத்தனர். தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சியுள்ள சங்ககால கோட்டையை அகழாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் மூலம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன் 2019 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரனையின் போதே தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முனைவர் இனியன் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்ய அனுமதி கேட்டு மத்திய தொல்லியல்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தார். பலகட்ட பரிசீலனைக்கு பிறகு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அகழாய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்திற்கு முதன் முதலில் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்ததால் முனைவர் இனியனை அகழாய்வு செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். அதன் பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழக புவியியல் துறை மூலம் அகழாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஸ்கேன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

அகழாய்வுப் பணிகளை கடந்த ஜூலை 30 ந் தேதி அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு வகையான ஓடுகள், இரும்பு ஆணி, மணிகள் கிடைத்திருக்கிறது. அகழாய்வுப் பணிகள் நடப்பதை அறிந்து தினசரி ஏராளமானவர்கள் வந்து பார்க்கிறார்கள்.
இந்தநிலையில் தான் சங்ககால கோட்டை முழுமையாக சுமார் 25 அடி உயரத்தில் 30 அடி அகலத்தில் கொத்தளம் அகழியுடன் இருப்பதை சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மூடியுள்ளதால் கோட்டை மதில் சுவர் வெளியே தெரியவில்லை என்பதால் அகழாய்வுக் குழுவினர் மதில் சுவரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் கோட்டை முழுமையாக தெரியும் பார்வையாளர்களையும் கவரும் என்று அமைச்சர் மெய்யநாதன் மூலம் கோரிக்கை வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவில் திருவரங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங்கம் வேப்பங்குடி ஊராட்சி 100 நாள் பணியாளர்கள் மூலம் கோட்டை மதில் சுவர் மேல் அடர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடியும் போது முழுமையான சங்ககால கோட்டையை காணமுடியும்.