ஆட்சியரால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு; பெண்கள் போராட்டம்

Women struggle as Tasmac shop closed by Collector reopens

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் 2 டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக்கூறி டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து, கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற மாதாந்திரக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடந்த 2017 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள், 2 டாஸ்மாக் கடைகளையும் அதனுடன் இணைந்திருந்த பார்களையும் அடித்து உடைத்தனர். டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து இரு டாஸ்மாக் கடைகளும் நிரந்தரமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று வணங்கியதுடன் கடைவீதியில் உற்சாகமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் டாஸ்மாக் மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை மீண்டும் கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு 2 வாரமாகச் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொத்தமங்கலம் ஊராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடை திறப்பதில்லை என்ற கிராம சபை தீர்மானத்தின்படி மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூடப்படவில்லை என்றால் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

Women struggle as Tasmac shop closed by Collector reopens

இந்த நிலையில், புதன் கிழமை மாலை கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கிராம பொதுமக்கள் கூட்டம் என்ற பெயரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொத்தமங்கலம் கிராம வளர்ச்சிக்காகவும், வர்த்தக நலன் கருதியும் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்றும், மீறி மூடினால் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஊரில் இரு வேறு கூட்டங்கள் நடத்தி டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும் டாஸ்மாக் கடை வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இன்று வெள்ளிக் கிழமை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் டாஸ்மாக் கடையை நோக்கிச் சென்றபோது, போலீசார் சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகளை வைத்து பெண்களை போகவிடாமல் தடுத்துதிருப்பி அனுப்பினர். கடையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர்.

Women struggle as Tasmac shop closed by Collector reopens

இதனால் அப்பகுதி பெண்களும் ஆண்களும் தோட்டங்களுக்குள் சென்று டாஸ்மாக் கடைக்கு முன்பு திரள முயன்றபோது, ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி தலைமையிலான போலீசார், 30 மீட்டர்தூரத்திலேயே தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் விசுவநாதன் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகு இன்று டாஸ்மாக் கடையை மூடுவது, பிறகு ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி அதன் முடிவுப்படி செயல்படுத்துவது. அதுவரை டாஸ்மாக் கடை திறப்பதில்லை என்று உறுதி அளித்ததால் பெண்கள் கண்ணீரோடு நன்றி கூறி கைகூப்பினர்.

அதே நேரத்தில் டாஸ்மாக் கடை வேண்டும் என்று மதுப்பிரியர்கள் போராட்டம் நடத்த தயாரானபோது, போலீசாரும் வருவாய்த்துறையினரும் சமாதான கூட்டத்தில் ஏற்படும் முடிவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களைக் கலைந்து செல்ல வைத்தனர். ஒரே நேரத்தில் இரு தரப்பினரும் டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

pudukkottai TASMAC Women
இதையும் படியுங்கள்
Subscribe