Women struggle with machetes in Tiruttani

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்தில் அமைந்துள்ளது பூனிமாங்காடு கிராமம். இந்தப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண்கள்,பூனிமாங்காடு கிராமத்திலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் சாலையில்,மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்புஇந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் வழக்கம்போல் தங்களுடைய பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

அப்போது, சென்னை பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. மேலும், அந்த வாகனத்தில் இருந்த மூன்று இளைஞர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பயங்கர வேகமாக சுற்றித் திரிந்தனர். இதனிடையே, அங்கு பணியில் இருந்த பெண்கள் அந்த 3 இளைஞர்களையும் பொறுமையாக போகும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த பெண்களை உதாசீனப்படுத்திவிட்டு அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்தனர். இதனிடையே, அந்த 3 இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் தள்ளாடிய நிலையில் அங்கிருந்த பெண்களை அச்சுறுத்தியுள்ளனர்.

Advertisment

அந்த சமயத்தில், சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணன் என்பவர் அந்த இளைஞர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்துகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துஅங்கிருந்து விரட்டியடித்தனர். அதுமட்டுமின்றி, அங்கிருந்த பெண்களையும் கத்தியை காட்டி பயமுறுத்தியுள்ளனர். இதனிடையே, இந்த தகவல் ஊருக்குள் பரவியதால்பொதுமக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அந்த நேரத்தில், ஊர்மக்கள் தங்களை தாக்க வருகிறார்கள் என்பதை சுதாரித்துக் கொண்ட கஞ்சா கும்பல்,தாங்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். அப்போது, தள்ளாடிய போதையில் இருந்த இளைஞர்கள்தடுமாற்றத்தில் அங்கிருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தனர். இதனிடையே, அங்கிருந்த பெண்கள் அந்த இளைஞர்களை தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்துவிட்டனர். மேலும், இதைப் பார்த்தவுடன் அந்த இளைஞர்கள் தங்களுடைய பட்டாக்கத்தியை அங்கேயே போட்டுவிட்டு டூவீலரில் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

Advertisment

இத்தகைய சூழலில், கஞ்சா போதையில் இருந்த 3 இளைஞர்களால் தங்கள் பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என ஊர் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் விட்டுச் சென்ற பட்டாக்கத்தியுடன் மாநில நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில், தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து,போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போலீசாரிடம் வாக்குவாதம் செய்த ஊர் மக்கள்,அந்த இளைஞர்களை கைது செய்யாவிட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியிருந்தனர். அப்போது, அவர்களை சமாதானம் செய்த காவல்துறை அதிகாரிகள்,இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை பெரிதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது கஞ்சா இளைஞர்களைக் கைது செய்யக் கோரி பட்டாக்கத்தியை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.