Women Struggle in front of the bank!

திருச்சி பாலக்கரை உடையான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (50). இவர், திருச்சி துறையூர் சாலை பெரமங்கலம் பகுதியில் சொந்தமாக ரைஸ் மில் கட்டி வந்தார். இந்த ரைஸ் மில்லிற்காக திருவரங்கத்தில் செயல்பட்டு வரும் ஒரு வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு 2 கோடியே 66 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

ராஜலட்சுமி குறிப்பிட்ட நாட்களில் பணத்தை கட்டாததால் ரூ1 கோடியே 80 லட்சத்திற்கு அந்த இடத்தை வங்கி நிர்வாகம் ஏலம் விட்டது. மேலும் 5 வீடுகளையும்ஜப்தி செய்துள்ளது. இந்நிலையில் இங்கு அடகு வைத்திருந்த 75 பவுன் நகையை மறுமதிப்பீடு செய்ய உள்ளோம் என்ற குறுஞ்செய்தியை கடந்த 2 நாட்களுக்கு முன் ராஜலட்சுமியின் செல்போனுக்கு வங்கி நிர்வாகம் அனுப்பி உள்ளது.

இதனையடுத்துஒரே தவணையில் பணத்தை கட்டி நகையை மீட்க தயாராக இருப்பதாகவும், தன்னிடம் நகையை காட்டச் சொல்லியும் வங்கி நிர்வாகத்திடம் ராஜலட்சுமி உறவினர்களுடன் வந்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜலட்சுமி தனது உறவினர்களுடன் வங்கியின் முன் தர்ணாவில் ஈடுபட முயன்றார். இதனை அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Advertisment

அப்போது போலீஸார் ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஏறத்தாழ ரூ. 5 கோடி மதிப்பிலான எனது இடத்தை ரூ 1.8 கோடிக்கு ஏலம் விட்டதோடு எனது வீட்டையும் ஜப்தி செய்துள்ளனர். தற்போது நகையை மறு மதிப்பீடு செய்வதாக கூறுகின்றனர். நான் ஒரே தவணையில் பணம் கொடுத்து நகையை மீட்க தயாராக உள்ளேன். ஆனால், அதற்கு முன் என் நகைகளை நான் பார்க்க வேண்டும் எனவும் கேட்கிறேன். வங்கி நிர்வாகம் முழுவதுமாக ஏமாற்றுவதாக தோன்றுகிறது என குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து போலீசார் முறையாக புகார் அளிக்க அறிவுறுத்தினர். அதனை ஏற்ற ராஜலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் தர்ணா முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.