Advertisment

“பெண்கள் நிம்மதியாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்” - அமைச்சர் கீதா ஜீவன்!

Women send their children to school with peace of mind says Minister Geetha Jeevan

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் ஊராட்சியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர், சமூக நலத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “மக்கள் சந்திப்பு, மக்கள் குறை கேட்பு, கல்யாண வீடு, காட்சி வீடு, துக்க வீடு என வேலை...வேலை.. என தொகுதிக்குள்ளும் மாவட்டத்துக்குள்ளும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மாநில அளவில் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்தில் கிட்டத்தட்ட 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தார்கள். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எப்.ஐ.‌ஆர் போடப்படவில்லை. எப்.ஐ.ஆர். போடுவதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட, திமுக மகளிர் அணி சட்டப் போராட்டம் நடத்தியது. எங்களுடைய கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பலரும் போராட்டங்கள் நடத்திய பிறகு எப்.ஐ.ஆர். போடப்பட்டது. அதில் தொடர்புடைய அத்தனை குற்றவாளிகளுக்கும் இன்றைக்கு வரவேற்கக் கூடிய ஒரு நல்ல தீர்ப்பு வந்துள்ளது. கொடூரமாக கொடுமைப்படுத்தியவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து புகார் கொடுக்க வந்தார்கள். இன்று வரை அவர்களது விவரங்கள் அனைத்தும் ரகசியமாகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு விசாரணை நிறைவடைந்து சரியான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

Women send their children to school with peace of mind says Minister Geetha Jeevan

இந்த திமுக ஆட்சியில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், முதியோர் உதவித்தொகை உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு என பல திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவி தொகையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு 11 ஆயிரம் மோட்டார் பைக்குகள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே மோட்டார் பைக்குகள் வழங்குவதற்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்தை பெண்கள் சந்தோஷமாக பயன்படுத்துகிறார்கள். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்தது. இன்றைக்கு அத்தகைய நிலை இல்லை. ‘ஸ்டாலின் பஸ் இருக்கு... அதனால காலையில ஒரு தடவை மார்க்கெட்டுக்கு போறேன். சாயந்திரம் ஒரு தடவை மார்க்கெட்டுக்கு போறேன்’னு கிராமங்களில் பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒரு கிராமத்தில் சென்று நேரில் பார்த்துவிட்டு மாணவர்கள் சோர்வாக இருக்கிறார்களே என எண்ணிப் பார்த்து பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் சோர்வை நீக்கி உற்சாகப்படுத்தி உள்ளார். வீட்டில் இருந்து காலை உணவு சாப்பிடாமல் வரும் குழந்தைகள் 11 மணியளவில் தலை சாய்ந்து விடுவார்கள். காலை 5 மணிக்கு எல்லாம் விவசாய வேலைக்கு செல்லும் தாய்மார்கள், ‘ஒரு காப்பி தண்ணியை போட்டு வைத்துவிட்டு பிஸ்கட், ரஸ்க்கை எடுத்து வைத்துவிட்டு நீ ஸ்கூலுக்கு போ.... தம்பி தங்கையை பார்த்துக் கூட்டு போ..’ என்று கூறிவிட்டு அவர்கள் வேலைக்கு சென்றுவிடுவார்கள். அதன்பிறகு வேலைக்கு சென்ற இடத்தில் தங்கள் குழந்தைகளின் நிலையை எண்ணி வேதனையடைவார்கள். ஏனென்றால் பெண்களுடைய நிலைமையே அப்படித்தான். எப்போதும் கணவர் எப்படி இருக்கிறார், பிள்ளைகள் எப்படி இருக்கிறார் என்ற நினைப்பில் தான் அதிகம் இருப்பார்கள். அவர்களுக்காகவே வாழக்கூடிய உயிர் பெண்கள் தான். தங்களை பற்றி நினைக்கவே மாட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. பெண்கள் நிம்மதியா தங்கள் குழந்தைகளை டிரஸ் மாட்டி தயார் நிலையில் பள்ளிக்கு அனுப்பினால் போதும். அங்கு ஆரோக்கியமான காலை உணவு கிடைக்கும். காலை உணவுத் திட்டத்தினால் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து விகிதம் அதிகரித்துள்ளது. பள்ளியில் நல்ல முறையில் சாப்பாடு கிடைப்பதால் ஈடுபாட்டுடன் பாடம் படிக்கின்றனர். ஆரோக்கியமாக இருப்பதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை குறைந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்கள் ஒரு குடும்பத்திற்கு நங்கூரம் போன்றவள். நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் செயல்பட முடியும். குடும்பத்தைச் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள முடியும். எந்த வியாதியும் நமக்கு அண்டாது.

நாங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் போகும்போது எம்.எல்.ஏ நிதி, பஞ்சாயத்து நிதி, ஒன்றிய நிதி என எல்லா திட்டங்களையும் பார்த்து பார்த்து எல்லா கிராமங்களும் தன்னிறைவு பெரும் வகையில் நிறைவேற்றி வருகிறோம். எல்லாத் துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் வாய்க்கு வந்ததை எல்லாம் இல்லாதது பொல்லாததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தூத்துக்குடியில் 13 பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் இது குறித்து கேட்டபோது நான் டிவியில் தான் பார்த்தேன் என்றார்.

முதலமைச்சர் அனுமதி இல்லாமல் துப்பாக்கிச் சூடு என்பது நடக்கவே நடக்காது. ஆனால் அவர் அப்படி ஒரு பொய்யைச் சொன்னார். ஆனால் பொய்யான செய்திகளை சொல்லும் ஆட்சி இது அல்ல. அதிமுக ஆட்சியில் தான் கொரோனா நேரத்தில் 7 மணிக்கெல்லாம் ஏன் கடையை அடைக்கவில்லை என சொல்லி சாத்தான்குளத்தில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் தகப்பனையும் மகனையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தி கொன்றார்கள் ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் 24 மணி நேரமும் கடையை திறந்து வைக்கலாம் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். உழைக்கிற மக்களை தடுக்கக் கூடியவர்கள் நாங்கள் அல்ல.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை எந்த முதலமைச்சரும் நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால் நம்முடைய முதலமைச்சர் கொரோனா மருத்துவமனை வார்டுக்குள்ளேயே நேரில் சென்று போய் பார்த்தார். நம்முடைய வாழ்வாதாரம் இன்று எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறது.

தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என ஒன்றிய அரசு சொல்கிறது. சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி, மின்னணு பொருட்கள் தயாரிப்பு, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி என்று பல விஷயங்களில் ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை சொல்கிறது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிந்தனையும் செயல்பாடும் தான் காரணம்.

தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும், தமிழ் மக்கள் நலம் பெற வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சி பெற வேண்டும் என்கிற ரீதியில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தொடர்ச்சியாக இந்த ஐந்தாவது ஆண்டிலும் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். நானும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஜீ.வி. மார்க்கண்டேயனும் பேசிக் கொண்டிருந்தபோது இது தேர்தல் ஆண்டு. நாம் பயங்கரமாக வேலை செய்ய வேண்டும் என்றேன். ஏற்கனவே நான்கு வருடமாக அப்படித்தானே வேலை செய்து வருகிறோம் என்றார். கடந்த நான்கு வருடத்தை விட இன்னும் ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். ஆகவே மக்கள் திமுகவுக்கு எப்போதும் ஆதரவாக துணையாக இருங்கள். முதலமைச்சர் கரத்தை பலப்படுத்துங்கள்” என்றார்.

இக்கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன், எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி, தலைமை கழக பேச்சாளர்கள் சு.த.மூர்த்தி, தூத்துக்குடி சரத் பாலா, எட்டயபுரம் தமிழ் பிரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

admk Geetha jeevan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe