Women Self Help Groups Rs. 82 crore loan assistance

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

Advertisment

அதையொட்டி கடலூரில் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர்,சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா.ராஜேந்திரன்,மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் வடிவு வரவேற்றார். இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிக்கான ஆணையை வழங்கினர். இதில் மாவட்டத்திலுள்ள 539 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 84 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சேர்ந்த 784 பேருக்கு ரூபாய் 82 கோடியே 45 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.

Advertisment

இதில் அமைச்சர் சி.வே.கணேசன் பேசுகையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெண்கள் நலனுக்காக 1989 ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றினார். அதனை படிப்படியாக மாற்றி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு அளித்துள்ளார். அரசு வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு 40 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், படிக்கின்ற கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒரு நாடு வளர்ச்சி பெற வேண்டுமென்றால் பெண்கள் முன்னேற வேண்டும். தற்போது கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு தமிழ்நாட்டிலேயே சிறந்த சுய உதவி குழுக்கான மணிமேகலை விருதை பெற்றுள்ளது. எனவே, அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “மகளிர் சுய உதவி குழுவினர் கைவினைப் பொருட்களை தயாரித்து அதனை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். மேலும் விற்பனை அங்காடியும் அமைக்கப்படும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் சில குறைபாடுகள் இருந்ததாக கூறி அதனை ஊதி பெரிதாக்கிவிட்டனர். அதனால்தான் இந்த முறை பொங்கல் தொகுப்பு வழங்காமல் சர்க்கரை, பச்சரிசியுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. அதிலும் கரும்பு வழங்கவில்லை என ஊதி பெரிதாக்கிவிட்டனர். அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது சிறு சம்பவங்களை கூட ஊதி பெரிதாக்கி அரசியல் செய்கின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் என்ன தான் ஒரு சம்பவத்தை ஊதி பெரிதாகினாலும் அதனை அப்போது ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு எந்த வித நலத்திட்டங்களும் செய்யவில்லை. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, திமுக மாநகர செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நெய்வேலி மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறித்துறை இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டது. இதிலும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட பாரம்பரிய பருத்தி மற்றும் பட்டு ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி ஜனவரி 4-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் அனைத்து கைத்தறி துணி ரகங்களுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.