Women passed away due to illegal abortions in Asakalathur

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் தனியார் மருந்தகம் நடத்தி வருகிறார். இவர் நடத்தி வந்த மருந்தகத்தில் அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்பவரது மனைவி கௌதமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த மருந்தகத்தில் சட்ட விரோதமான முறையில் கருவுற்ற தாய்மார்களுக்கு கருக்கலைப்பு நடைபெற்று வருவதாக வேப்பூர் தாலுகா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கே சென்றபோது, மருந்தகத்தின் வெளியே சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. காரின் உள்ளே, பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் கருவி மற்றும் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்யத்தேவையான மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் இருந்துள்ளன. அவைகளைக் கைப்பற்றிய போலீசார்நடத்திய விசாரணையில், அசகளத்தூரை சேர்ந்த புரோக்கர்கள் ராமலிங்கம் மகன் தினேஷ், அதே ஊரைச் சேர்ந்த குமாரசாமி மகன் கண்ணதாசன் ஆகியோர் மருந்தகத்தில் இருந்துள்ளனர்.

Advertisment

இவர்கள் நான்கு பேரிடமும் வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களை புரோக்கர்கள் மூலம் அழைத்து வந்து நடமாடும் கருக்கலைப்பு மையமாக வைத்து செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்கள் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்திய சொகுசு கார், ஸ்கேனர் இயந்திரம் உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்தனர். கருவுறும் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிவதற்காக நிரந்தரமான கட்டடங்களில் அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி கருக்கலைப்பு செய்தால் அது சட்டவிரோதம். மருத்துவத் துறையினர் மற்றும் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக சொகுசுக் காரில் அனைத்து வசதிகளையும் தயார் செய்து நடமாடும் கருக்கலைப்பு மையத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். கருக்கலைப்பு செய்யும் பெண்களை ஒரே இடத்திற்கு வரவழைக்காமல், அவர்கள் இடத்திற்கே சென்று காரிலேயே வைத்து கருக்கலைப்பை நூதன முறையில் செய்து வந்துள்ளனர்.

Advertisment

இதேபோல சம்பவங்கள் அடிக்கடி இந்தப் பகுதியில் அரங்கேறி வருகிறது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி 27 வயது அமுதா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அமுதா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்வதற்கு அசகளத்தூர் என்ற ஊரில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு சென்றுள்ளார். அந்த மருந்தக உரிமையாளர் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு வயிற்றில் வளரும் கரு பெண் குழந்தை என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது பெண் குழந்தையா? இனி பெண் குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்த அமுதா, அந்த மருந்தக உரிமையாளரிடம் கருக்கலைப்பு செய்வதற்கு ஆலோசனை கேட்டுள்ளார். அவர் தனது மருந்தகத்தில் இருந்து கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து சாப்பிடுங்கள் என்று கூற, அமுதாவும் அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்ட பிறகு, நிறாமணியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்த நிலையில், நேற்று காலை அவருக்கு கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதின் விளைவாக ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது.

இதனால் அமுதா மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அமுதாவை உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அமுதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த மரணத்தால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போனது. இத்தகைய சட்டவிரோத கருக்கலைப்பால் அமுதா மட்டுமின்றி செல்வி, பெரியநாயகம் போன்ற பெண்கள் இந்தப் பகுதிகளில் உயிரிழந்துள்ளனர். இந்த சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் அனைவரும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு வரை படித்த போலி மருத்துவர்கள். இவர்கள் மீண்டும்மீண்டும்மிகத் துணிச்சலோடு கருக்கொலைகளை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Advertisment