Women in jail with children should be released on bail - Senior Advocate

சிறைகளில் 6 வயதுக்கு கீழான குழந்தைகளுடன் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது குறித்து உயர்மட்டக் குழு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வைகை, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையீடு செய்தார்.

Advertisment

அப்போது அவர், பல சிறைகளில் ஆறு வயதுக்குக் கீழான குழந்தைகளுடன் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்கள் போன்றகாலிப்பணியிடங்களைப் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

Advertisment

இதைக் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுஇது சம்பந்தமாக விவாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த தலைமை நீதிபதி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை மே 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.