தேங்காய் உரிக்கும் பெண் தொழிலாளி கொலை!

salem district, women incident police investigation

சேலம் அருகே தேங்காய் உரிக்கும் பெண் கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் முள் புதரில் இருந்து நிர்வாண நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளி பள்ளக்காரனூர் காட்டுவலவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தேங்காய் உரிக்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பெரியக்காள் (வயது 38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 31) மாலை 06.30 மணியளவில் பெரியக்காள், பால் வாங்க அருகில் உள்ள கடைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டுச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு முள்புதரில் பெரியக்காள் நிர்வாண நிலையில், சடலமாகக் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. மனைவி அலங்கோலமான நிலையில் இறந்து கிடப்பதைப் பார்த்து அவருடைய கணவர் கதறி அழுதார்.

காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெரியக்காளின் உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, ஜலகண்டாபுரம் காவல் நிலைய காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலைக்குத் தவறான தொடர்பு காரணமாக இருக்கலாம் என கருதுகிறார்கள். பெரியக்காள் தனது கணவருடன் தேங்காய் உரிக்கும் மண்டியில் கூலி வேலை செய்துவந்துள்ளார். அதே மண்டியில் சவுரியூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் (வயது 30) என்பவருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதையறிந்த கணவர், அவரைப் பலமுறை கண்டித்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் பால் வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தபோது கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பெரியக்காளுடன் நெருங்கிப் பழகிவந்த ஆண் நண்பர் சுரேஷூம் திடீரென்று மாயமாகிவிட்டார். அதனால் அவர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பெரியக்காள் கணவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருவதோடு, தலைமறைவான சுரேஷையும் தேடிவருகின்றனர்.

incident Police investigation Salem
இதையும் படியுங்கள்
Subscribe