
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது தில்லைநாயகபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பாசிமுத்தான் ஓடை அருகே உள்ள வாய்க்கால் கரையில் 20க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் மக்கள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றி கழகம் சார்பில் உதவிகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களைக் கூறும் நிகழ்ச்சி இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் சீனு தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் புலவேந்திரன், பொருளாளர் அருண் ராஜ், துணை செயலாளர் கென்னடி, பாலு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் லாரன்ஸ் கிருபா, துணை அமைப்பாளர் சாய் பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது இருளர் பழங்குடியின மக்களுக்குத் தேவையான கொசுவலை, அரிசி, காய்கறி, புடவை உள்ளிட்டவற்றைக் கட்சியின் நிர்வாகிகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மார்ச் 8ஆம் நாள் அங்கு மகளிர் உரிமைகள் காத்திடும் நோக்கில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1975ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 8ஆம் நான் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளும் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.