Skip to main content

“பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியவில்லை” - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Women could not go out safely because of the bootleg liquor trade

 

வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் கள்ளச் சாராயத்தால், காமேஸ்வரம் கிராமத்தில் கல்யாணம் கலவரமாக மாறும் அவலம். மேலும் பள்ளி மாணவ மாணவிகளும், குடிமகன்களால் பாதிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ளது காமேஸ்வரம் கிராமம். அந்த கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் வசிக்கின்றனர். அங்குள்ள மீனவ குடியிருப்பு பகுதியின் அருகே உள்ள சவுக்கு மற்றும் முந்திரிக் காடுகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் கள்ளச் சாராயமும் மதுபானங்களும் கட்டுக்கடங்காமல் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மகளிர் சுய உதவிக் குழுவினர் பலமுறை கீழையூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளத்தனமாக விற்கப்படும் பாண்டி சாராயத்தால் கிராமத்திலுள்ள மாணவ, மாணவிகளும், பெண்களும் பாதுகாப்பாக செல்ல முடியவில்லை எனக் கூறி இன்று காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்து வந்து ஆட்சியர் அருண் தம்புராஜிடம் புகார் அளித்தனர்.

 

அந்தப் புகாரில், “முந்திரிக் காடுகளில்  கள்ளத்தனமாக விற்கப்படும் சாராயத்தை அருந்திவிட்டு வரும் இளைஞர்கள் மற்றும் குடிமகன்களால் தங்களது காமேஸ்வரம் கிராமத்தில் நடக்கும் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் எல்லாமே கலவரமாகவே மாறி வருகிறது. சாராய விற்பனை குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால், அதனை போலீசார் சாராய வியாபாரிகளிடம் தெரிவித்து லாபம் அடைகின்றனர். சாராய வியாபாரிகள் நேரடியாக வந்து தெருவில் பெண்களை அச்சுறுத்துகின்றனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்