Skip to main content

கையூட்டு பெற்று பட்டா மாற்றம்; சார்பதிவாளர் மீது பெண் கண்ணீர் மல்கப் புகார்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

women complain about bribe and exchange Strap sub registrar in Ranipet

 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சூரியகாந்தி - செல்வமணி. சூரியகாந்தியின் அப்பா வேலு, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த சூரியகாந்தியின் சின்ன மாமனார் முனுசாமியின் மகள் திருமணத்துக்கு 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதனால் அதே பகுதியில் உள்ள முனுசாமிக்குச் சொந்தமான வீட்டுமனையை வைத்துக்கொள், உனக்கு எழுதி கொடுக்குறேன் எனக் கூறியுள்ளார். இதனால் வேலு மகள் சூரியகாந்தி, அப்பா வாங்கிய வீட்டுமனையில் அரசால் வழங்கும் தொகுப்பு வீடு கட்டிக்கொண்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் தரை வரி, வீட்டு வரி உள்ளிட்டவற்றைக் கட்டி கொண்டு வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

 

இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே நில பிரச்சனை தகராறு ஏற்பட்டதால், முனுசாமி ‘நான் ஏன் ஏற்கனவே விற்ற வீட்டு மனையைக் கொடுக்க வேண்டும். விற்ற வீட்டுமனையை என் மகன் தாமோதரனுக்கே எழுதி கொடுக்கிறேன்’ எனக் கடந்த 5 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் சார் பதிவாளருக்கு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து கலவை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ததாகத் தெரிகிறது. பத்திரப் பதிவு செய்யும் முன் சார் பதிவாளர் கிரயம் செய்யும் இடத்தை நேரில் பார்த்த போதுதான் அந்த இடத்தில் குடியிருந்த சூரியகாந்திக்குப் பத்திரப்பதிவு செய்திருப்பதாகத் தகவல் தெரிய வந்தது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியகாந்தி அவரது கணவர் செல்வமணி இருவரும் கலவை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளரிடம் முறையிட்டு, நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த வீட்டை என் அனுபவத்தில் இருக்கும்போது, எனக்குத் தெரியாமல் எப்படி பத்திரப்பதிவு செய்யலாம் என அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. அப்போது, கலவை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மூர்த்தி, போராட்டத்தில் ஈடுபட்ட சூரியகாந்தி மற்றும் அவரது கணவர் செல்வமணியைக் காவல் நிலையம் அழைத்தனர். ஆனாலும், “எனக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து போகமாட்டேன். நான் இங்கேயே தீக்குளிப்பேன்” எனச் சூரியகாந்தி தெரிவித்தார்.

 

அதன் பின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, சூரியகாந்தி மற்றும் அவரது கணவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர்கள் நேரில் சென்று முறையாக அக்கம் பக்கத்தில் நிலம் யாருக்குச் சொந்தமானது? யார் இங்கு வசித்து வருகின்றனர் என விசாரிக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் இது போன்று விசாரிக்காமலேயே கையூட்டு பெற்று இதுபோன்று பத்திரம் பதிவு செய்வதால்தான் பல்வேறு மோதல்  சம்பவங்கள்  ஏற்பட்டு கொலைக் குற்றங்கள் நடக்கிறது. எனவே, இந்த பத்திரப்பதிவு சம்பந்தமாக மாவட்ட சார்பதிவாளர் முறையாக விசாரணை செய்து பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்மணி கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்