பிறந்து ஒரு வாரமே ஆன 'பெண்' சிசு கொலை! - பாட்டி கைது!

women children incident police investigation

மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த தம்பதி சின்னச்சாமி- சிவப்பிரியா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 10- ஆம் தேதி மூன்றாவதாகப் பெண் குழந்தைபிறந்துள்ளது.

இந்த நிலையில், உடல்நிலை சரியில்லை எனக் கூறி இந்த குழந்தையை நேற்று (18/02/2021) நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் கொண்டு வந்தாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும், குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர்கள், காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையின் உடலை உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக, குழந்தையின் பெற்றோர் மற்றும் பாட்டியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.இந்த நிலையில், குழந்தையின் பாட்டி நாகம்மாளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தை மீது தலையணையை அழுத்தி மூச்சுத் திணறடித்துக் கொன்றது தெரிய வந்தது. அதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல், பெற்றோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையைச் சொந்த பாட்டியே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

incident madurai Police investigation women children
இதையும் படியுங்கள்
Subscribe