சூளகிரி அருகே, சித்தியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 21). கூலித்தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வரும் இவருடைய சித்திக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள், அங்குள்ள பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
தங்கவேலுவும், அந்தச் சிறுமியும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அண்ணன், தங்கைதானே என்று கருதியதால் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்திக் கொண்ட தங்கவேல், அந்தச் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பலமுறை பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தாள்.
சிறுமியின் வயிறு பெரிதாகிக் கொண்டே போனதால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். இதில் அந்தச் சிறுமி, 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஓசூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
அண்ணன் முறை கொண்ட வாலிபரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.