Skip to main content

ரவுடி கைது; போலீசுக்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை - களேபரமான காவல் நிலையம்!

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

Women argue with police while arresting rowdy in Thoothukudi

கடந்த ஆண்டு மே 20 ஆம் தேதி திருநெல்வேலியில் நீதிமன்றம் எதிரில் ரவுடி தீபக் ராஜா பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாளை முன்னிட்டு  அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கத் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டனர். மாவட்டத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும், சென்சிட்டிவான பகுதிகளிலும் செக் போஸ்ட்கள் அமைத்து போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டன. சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கூலிப்படை நெட்வொர்க்குகள்,  ரவுடிகள் நடமாட்டமும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன.

இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியும்  வெடிகுண்டு வீச்சு, மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கண்ணன் (39) என்பவரை இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு 20 ஆம் தேதி காலையில் அழைத்து வந்தனர். இரவு வெகு நேரம் ஆகியும் அவரை விடுவிக்காததால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 20க்கு மேற்பட்டோர் தென்பாகம்  காவல் நிலையத்திற்கு நியாயம் கேட்டு வந்தனர்.  கண்ணன் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்த அவர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், கண்ணன் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இட்லி கடை அமைத்து தொழில் செய்து வருவதாகவும், ஏ பிளஸ் ரவுடி, சி பிளஸ் ரவுடி என ஏதேதோ கூறி அவர் மீது வழக்குப் பதிந்துள்ளதாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

Women argue with police while arresting rowdy in Thoothukudi

இதனிடையே, தூத்துக்குடி அமுதா நகர் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் தகராறில் ஈடுபட்டு இசக்கி என்பவரை தாக்கிய வழக்குத் தொடர்பாக கண்ணனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் தலைமையிலான போலீசார்  பாளை சாலையில் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது சந்தேகம்படும்படி மூவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பொருமாள் நகரை சேர்ந்த கிங்சன்(23), பாரதிநகரை சேர்ந்த மதன்குமார்(31) அண்ணா நகரை சேர்ந்த கண்ணன்(39) ஆகிய மூவர் என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து தூத்துக்குடி போல்பேடர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் சுற்றித் திரிந்ததது தெரியவந்தது. அதன் காரணமாகவே தற்போது கண்ணனை கைது செய்திருக்கிறோம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அவரது உறவினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

Women argue with police while arresting rowdy in Thoothukudi

இதனைத் தொடர்ந்து கண்ணனை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல போலீசார் அவரை வாகனத்தில் ஏற்றியபோது, உறவினர்கள் ஜீப்பின் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசாரையும் நிருபர்களையும்  ஆபாச வார்த்தைகளால் உரித்தனர். காவல் ஆய்வாளர்கள் திருமுருகன், ராமலட்சுமி, எஸ். ஐ. முத்தமிழ் அரசன் மற்றும் பெண் போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது  வாகனத்தை அடித்து, பெண் காவலரை கீழே தள்ளி, இரு தரப்பு மாறி மாறி மிரட்டி,  தள்ளுமுள்ளு, கைகலப்பு என அந்த இடமே பெரும் ரகளையானது.

ஒரு வழியாக அங்கிருந்து போலீஸ் வாகனம் வெளியேறி அரசு மருத்துவமனைக்குச் சென்று கண்ணனுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. மருத்துவமனையிலும் காவல்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பிய உறவினர்கள் கண்ணனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று   அவசர சிகிச்சை பிரிவு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் மருத்துவ பரிசோதனை முடிந்த கையோடு கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இரவோடு இரவாக சிறையில் அடைத்தனர். 

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

சார்ந்த செய்திகள்