
வரதட்சணைக் கொடுமையால், இளம்பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் விட்டிப்பிள்ளை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவருக்கும் வங்கியில் பணியாற்றும் ரமேஷ் என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு, ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்தின்போது, 15 பவுன் நகையும் 1 லட்சம் ரூபாய் ரொக்கமும் பெண் வீட்டு சார்பாக கொடுத்ததாகவும், அதை ஏற்றுக்கொண்ட மாப்பிள்ளை வீட்டார், மேலும், 5 லட்சம் பணம் கேட்டு கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பணம் தராத ஆத்திரத்தில் கணவர் ரமேஷ் தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக குற்றஞ்சாட்டும் மகேஸ்வரி, இதுகுறித்து கீழக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பலமுறை மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அங்கும் புகார் தேக்க நிலையில் கிடக்க, ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த மகேஸ்வரி, தனது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள் வீரகுமார், குமார் உள்ளிட்ட 3 பேர் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தினார்கள்.