Woman's life critic due to improper surgery! Relatives roadblock

திருவண்ணாமலை அடுத்த வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். இவரது மனைவி ராஜகுமாரி. இந்த தம்பதிக்குத் திருமணம் நடந்து 16 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இதுவரை குழந்தை இல்லை என்பதால் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் ராஜகுமாரியின் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதாகக் கூறியுள்ளனர். இதற்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனாலும் இன்னும் சரியாகவில்லை. நீர்க் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் எனச் சிலர் கூறியதன் அடிப்படையில், திருவண்ணாமலை நகரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் ஆலோசித்தனர். மருத்துவரின் கணவர், ஈ.என்.டி மருத்துவராகவுள்ளார். இந்த தனியார் மருத்துவமனையை அவர்கள் இருவரே நடத்திவருகின்றனர்.

Advertisment

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காலை 8 மணி அளவில் ராஜகுமாரியின் அப்பா, அம்மா, தம்பி மூவரும் ராஜகுமாரியை அழைத்துவந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாலை 3 மணியளவில் அந்த மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அறுவை சிகிச்சையில் தவறு ஏற்பட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர அவசரமாகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த கிளினிக் நிர்வாகமோ ராஜகுமாரியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தை அவர்களது குடும்பத்தினருக்கு மிகத் தாமதமாகவே தெரிவித்துள்ளது

Advertisment

உறவினர்கள், அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது மிகவும் சீரியஸான நிலையில் ராஜகுமாரி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் எதுவும் செய்யவேண்டாம் என அத்தனியார் மருத்துவமனையின் தலைவர் சிகிச்சையில் உள்ள பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சிலர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அவர்களது குடும்பத்தினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், செப்டம்பர் 29-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மருத்துவமனைக்கு முன்பு திருவண்ணாமலை - பெங்களூர் சாலையில் அப்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் கிரண் சுருதி தலைமையிலான போலீசார், புகார் தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என நம்பிக்கை தந்து கூட்டத்தைக் கலைத்தனர்.