
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ளது வளையமாதேவி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் 50 வயது வேல்முருகன். கடந்த 25ஆம் தேதி கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளி அருகே மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வேல்முருகன். இது சம்பந்தமாக சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் வேல்முருகனின் சந்தேக மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வேல்முருகனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது உடலில் காயங்கள் இருந்ததால் வேல்முருகனை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வேல்முருகன் தலையில் மரக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது மனைவிக்கும் வேல்முருகனுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக வேல்முருகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை செய்தனர்.
அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘நான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன்.அப்படி கூலி வேலைக்கு செல்லும் போது எனக்கும் வேல் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் பல்வேறு இடங்களில் சந்தித்து தகாத உறவு வைத்திருந்தோம். இதற்கிடையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த எம்ஜிஆர் என்கிற ராமச்சந்திரன் என்பவருடன் எனக்கு தகாத தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டுபிடித்த வேல்முருகன் என்னை கண்டித்தார். ராமச்சந்திரனுடன் உள்ள தொடர்பை துண்டிக்கும் படி பலமுறை என்னை எச்சரித்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இரவு 10 மணியளவில் குடிபோதையில் வேல்முருகன் என் வீட்டிற்கு வந்தார். அப்போது நான் ராமச்சந்திரனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தேன்.
இதை பார்த்த வேல்முருகன் என் மீது ஆத்திரமடைந்து அவனுடன் பேசுவதை நிறுத்து என்று கூறி கண்டித்தார். அதைக் கேட்பதற்கு நீ யார் நீ என் கணவன் இல்லை, அப்படி இருக்கும்போது நான் யாரிடம் பேசினால் உனக்கு என்ன என்று எதிர்த்து வேல்முருகனிடம் வாக்குவாதம் செய்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பிறகு என்னை சமாதானம் செய்த வேல்முருகன் பாலியலில் ஈடுபட வருமாறு அழைத்தார். அவர் மீது இருந்த கோபத்தின் காரணமாக அதற்கு நான் உடன்பட மறுத்தேன். இதனால் அவர் மேலும் கோபமுற்றார். எங்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து வேல்முருகன் தலையில் சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் வேல்முருகன் சுருண்டு கீழே விழுந்தார்.
போதை மயக்கத்தில் கிடப்பதாக எண்ணினேன். இருந்தும் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பது எனக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தபோது வேல்முருகன் எழுந்திருக்கவில்லை. வேல்முருகன் இறந்து போனது தெரியவந்தது. குழந்தைகள் வெளியூர் சென்றிருந்தனர். உடனடியாக எனது இரண்டாவது காதலன் ராமச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி சம்பவ இடத்திற்கு வரவழைத்தேன். இருவரும் சேர்ந்து சிறிது நேரம் ஆலோசித்து எனது கணவர், குழந்தைகள் வருவதற்குள் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன் பின் இருவரும் சேர்ந்து இரவு 11 மணி அளவில் வேல் முருகன் உடலை தூக்கிச் சென்று எங்கள் ஊர் பள்ளிக்கூட வளாகத்தில் போட்டு விட்டுவந்து விட்டோம்.
மறுநாள் காலையில் வேல்முருகன் இறந்து கிடப்பது கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதனால் ஊரில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நாங்கள் இருவரும் எதுவும் தெரியாதது போல் கும்பலோடு கும்பலாக நின்று வேல்முருகன் இறந்து கிடந்ததை ஒன்றும் அறியாதவர்கள் போல நின்று வேடிக்கை பார்த்தோம். வேல்முருகன் கொலையை முன்னெச்சரிக்கையாக செய்தும் கூட போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன்’ என இவ்வாறு போலீசாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அப்பெண் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.