Woman who taken away the alcohol shop in nagapattinam

Advertisment

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது. காவல்துறையோ நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என ஆத்திரமுற்ற பெண்கள் சாராய கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துவருகிறது. இதுகுறித்து காவல்துறையினரும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த மதுவிலக்கு காவலர்களையும் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் சாராய விற்பனை தடையின்றி நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம், வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி கண்ணாபூர் பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் குடிக்க பணமில்லாமல் மனைவியின் தாலி சங்கிலியை சாராய வியாபாரியிடம் கொடுத்து குடித்துள்ளார். வீட்டில் பிரச்சனை ஏற்படவே மனைவியின் தாலி சங்கிலியை மீண்டும் கொடுக்குமாறு ராமசாமி முத்துகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார்.சாராய வியாபாரியோ தரமுடியாது என்று சொல்லி ராமசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமசாமியின் மனைவியையும் மகன்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து அவர்கள் வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த கிராமப் பெண்கள் ஒன்று திரண்டு முத்துகிருஷ்ணனைதுரத்திப்பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஒன்று சேர்ந்து சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரைக் கொட்டகை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராய கடை வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.