Advertisment

கல்யாண ராணியின் மறுபக்கம்; சுற்றி வளைக்கப்பட்ட தமிழ்ச்செல்வி - அதிரவைக்கும் சம்பவம்!

woman who married many people and cheated

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். 35 வயதான இவர் தாராபுரம் - உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மகேஷுக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக வரண் தேடி வந்தனர்.

Advertisment

இதற்கிடையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செல்போன் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா என்பவருடன் மகேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த செயலியைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சத்யா தெரிவித்ததுடன், தமிழ்ச்செல்வியையும் மகேஷுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அதோடு மகேஷுக்கு திருமண வரன் அமையாமல் இருந்ததால் சத்யாவை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதனிடையே, இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த சமயத்தில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில் அவசரமாகத் திருமண ஏற்பாடு செய்கிறார்கள் எனக் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மகேஷிடம் சத்யா வற்புறுத்தி உள்ளார்.

Advertisment

இந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக தமிழ்ச்செல்வி தலைமையில் மகேஷுக்கும் சத்யாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை மகேஷின் பெற்றோரும் ஏற்றுக்கொண்ட நிலையில் சத்யாவுக்கு 12 பவுன் நகைகள், புடவைகள் என அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். இதனிடையே, இவர்களுடைய திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கடந்த நிலையில்.. சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சத்யா தனக்கு 30 வயது எனக் கூறிய நிலையில் அவர் கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது அடையாள அட்டையை வாங்கி பார்த்துள்ளார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ், சத்யாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, மகேஷ் தரப்பிற்கும் சத்யாவிற்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், கோபமடைந்த சத்யா, மகேஷையும் அவரது குடும்பத்தையும் மிரட்டி உள்ளார்.

இதனால் உஷாரான மகேஷ், தனது மனைவி சத்யாவை சமாதானம் செய்வதுபோல் நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா போலீஸ் விசாரணையின் போதே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். அதன்பிறகு, அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில், சத்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. அந்த நேரத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யா அவரை விட்டு பிரிந்தார். காலப்போக்கில் தனிமையில் இருந்த சத்யா பணத்திற்காக வேறு திசையில் பயணிக்க தொடங்கினார்.

திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சத்யாவின் திருமண பட்டியலில் டிஎஸ்பி, கரூரில் காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசாருடனும், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபருடனும் என சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சத்யா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது. திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள் என சத்யாவின் பட்டியல் நீண்டு கொண்டே போனது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கல்யாண ராணி சத்யாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன்பின்னர் சத்யாவிற்கு மூளையாகவும், புரோக்கராகவும் செயல்பட்ட தமிழ்ச்செல்வியை போலீசார் தேடி வந்தனர்.

கடந்த 3 மாதமாக புதுச்சேரி, கேரளா, கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு போன்ற நகரங்களில் இந்த தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில், தமிழ்ச்செல்வி கரூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், 15ஆம் தேதி அதிகாலை நேரத்தில்.. தமிழ்ச்செல்வியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை தாராபுரத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பிறகு.. தமிழ்ச்செல்வியை உடுமலை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். அதே வேளையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை சிறையில் இருந்த சத்யா ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

police marriage woman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe