Skip to main content

வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்; ஒரு பெண்ணுக்கு 3 கணவர்கள் - திக்குமுக்காடிய காவல்துறை

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

woman who is married to 3 men

 

வடிவேலு நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருப்பது போல காட்சிகள் வரும் அப்படி ஒரு உண்மைச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் 24 வயது ஸ்ரீ ராமகண்ணன். இவருக்குக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி திருபுவனைப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது அவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார் ராம கண்ணன்.

 

இந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் தோழி ஒருவர் திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவரைப் பார்ப்பதற்காக ஸ்ரீ ராம கண்ணனை தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்தப் பெண் ஸ்ரீராம கண்ணனை தான் காதலிப்பதாகவும் நாம் இருவரும் இங்கேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசையாகக் கூறி அவரை தன் காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார். ஸ்ரீ ராம கண்ணனும் அந்தப் பெண்ணும் வேடசந்தூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக பூசாரிபாளையம் வந்துள்ளனர். இருவரும் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கும் விழுப்புரம் மாவட்டம் தக்கா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது ராம கண்ணனுக்குத் தெரிய வந்துள்ளது.

 

இருப்பினும் ஸ்ரீ ராம கண்ணன் அந்தப் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரிய செவலை கிராமத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் தான் கருத்தரித்து இருப்பதாக ஸ்ரீ ராம கண்ணனிடம் தெரிவிக்க, சந்தோசமடைந்த அவர் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய உறவினர்களை அழைத்து மனைவிக்கு வளையல் அணி விழா நடத்தியுள்ளார். விழா முடிந்த கையோடு புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டிற்கு அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளார். சில மாதங்கள் கழித்து பெண்ணுக்கு அவரது தாய் வீட்டிலேயே குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதை அடக்கம் செய்துவிட்டோம் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். 

 

அதை நம்பிய ராமக்கண்ணன், மனைவி உடல்நிலை சரியாகும் வரை அவரது தாய் வீட்டிலேயே இருந்துவிட்டு ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து மனைவியைப் பார்ப்பதற்காக அவர் தாய் வீட்டிற்குச் சென்ற ஸ்ரீ ராம கண்ணனிடம், அந்தப் பெண்ணின் தாயார் மகள் சில நாட்களுக்கு உங்கள் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாளே என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீ ராம கண்ணன், தன் மனைவியின் தோழிகள் உட்பட பல்வேறு இடங்களில் விசாரித்துள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றார் ? என்ன ஆனார்? என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராமக்கண்ணன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் துணை ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் ராம கண்ணன் தனது சொந்த வேலை காரணமாக திருக்கோவிலூருக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு பெட்ரோல் பங்க்கில் ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆணுடன் தனது மனைவி சேர்ந்து வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை வழிமறித்து இது யார் ஏன் நம் வீட்டுக்கு வரவில்லை என்று ராம கண்ணன் மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த பெண் நீ யார் என்றே எனக்குத் தெரியாது அப்படி இருக்க உன் மனைவி என்று என்னை எப்படி கூறுகிறாய் என்று ஏட்டிக்குப்போட்டியாக கேள்வி கேட்டுள்ளார்.

 

இதையடுத்து ஸ்ரீ ராம கண்ணன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். அங்கிருந்து விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணையும் அவருடன் வந்த வாலிபரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராம கண்ணனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை அவருடன் திருமணமே நடக்கவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமக்கண்ணன் தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடைபெற்ற திருமண புகைப்படங்களை போலீசாரிடம் காட்டி உள்ளார். போலீசார் விசாரணையில் அந்தப் பெண் தற்போது மூன்றாவதாக ஒரு இளைஞரைத் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண் தனக்கு கர்ப்பம் தரிக்கவில்லை என்றும் தன் வயிற்றில் நீர் கட்டி இருந்தது அதை என் தாய் வீட்டுக்குச் சென்று மருத்துவமனையில் சரி செய்துகொண்டேன். தற்போது மூன்றாவதாக இந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

 

அவர் திருமணம் செய்து கொண்ட அந்த இளைஞரிடம் போலீசார் கேட்டபோது இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்தது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உரியத் தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.