woman who got married for love by cutting her mangalyam near karur

கரூர் மாவட்டம் நல்லமுத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வயதான கணபதி. இவரும், உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி ஸ்ரீ தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். கணபதி தற்போது புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் ஸ்ரீ தேவி கோவையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதிலும் குறிப்பாக கணபதியின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தான், கடந்த திங்கள்கிழமை(16.6.2025) அன்று நண்பர்கள் உதவியுடன் கணபதி கோவையில் உள்ள ஒரு கோவிலில் வைத்துக் காதலி ஸ்ரீ தேவியைத் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள் சொந்த ஊரான கரூருக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். இந்த தகவலை அறிந்த கணபதியின் வீட்டார், பேருந்து பல்லடம் அருகே வந்தபோது அதனை வழிமறித்து மணமக்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து காதல் ஜோடி இருவரையும் தாந்தோன்றிமலை அருகே உள்ள வீட்டிற்கு கணபதியின் வீட்டார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு வைத்து இருவரையும் கடுமையாக தாக்கியதாகவும், ஸ்ரீ தேவியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்தெறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு பெண்ணின் வீட்டிற்கு போன் செய்த கணபதி வீட்டார், “உங்களுடைய மகளை வந்து அழைத்துச் செல்லுங்கள் இல்லையென்றால் இருவரையும் கொன்று விடுவோம்” என்று கூறியதாகவும், அதன்பேரில் பெண்ணின் அண்ணன் அங்குச் சென்று ஸ்ரீ தேவியை மீட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கரூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ஸ்ரீதேவி, மேலே குறிப்பிட்டுள்ள நடந்த சம்பவத்தை வேதனையுடன் செய்தியாளர்களிடம் விவரித்தார். மேலும், காதல் கணவரை மீட்டு தரும்படி காவல்துறைக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியை மணமகன் வீட்டார் அடித்து பெண்ணின் தாலியை அறுத்து விரட்டிய சம்பம் கரூர் மண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.