/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hkjl_0.jpg)
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவோர் கூட ஓட்டுக்கு பணம் வரலயேன்னு கேட்டு வாங்கிய அவலமான நிலையில், ரோட்டில் கிடந்த ரூ.1.10 லட்சம் பணத்தை அப்படியே போலீசாரிடம் ஒப்படைத்து உரியவரிடம் கொடுக்கச் சொன்ன பெண்ணுக்கு போலீசார் மட்டுமின்றி பொதுமக்களின் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரிசிமண்டி நடத்திவருபவர் திருச்செல்வம். சில நாட்களாக விற்பனை செய்த பணம் ரூ.7.60 லட்சத்தை வங்கியில் போட போனபோது ரூ.1.10 லட்சம் மட்டும் காணாமல் போனது. பதறிக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர் டிஎஸ்பி செங்கமலக்கண்ணனிடமும் நேரில் பணம் காணாமல் போனது பற்றி கூறியுள்ளார். குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்திய போது பணம் தவறி விழுந்த போது அந்த வழியாகச் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்ற ஒரு பெண் சாலையில் கிடந்த பணக்கட்டுகளை எடுத்து அருகில் உள்ள கடைகளில் விசாரித்துவிட்டு யாராவது பணத்தைத் தேடி வந்தால் அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிடுகிறோம். அங்கே வரச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. ஆனால் யார் அந்த பெண் என்பது குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில் தான் இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன்-தனலெட்சுமி தம்பதி திங்கள் கிழமை தஞ்சாவூர் சென்று எஸ்பி ரவளிப்பிரியாவிடம் பட்டுக்கோட்டையில் இந்தப் பணம் கிடந்தது. உரியவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி கொடுத்துள்ளனர். ஏற்கனவே பட்டுக்கோட்டையில் புகார் பதிவாகி இருந்ததால் இது அரிசிமண்டி திருச்செல்வம் பணம் தான் என்று பணத்தைப் பெற்றுக் கொண்ட எஸ்பி, கைக்குழந்தை மற்றும் கணவருடன் வந்து பணத்தை ஒப்படைத்த பெண்ணின் நேர்மையைப் பாராட்டியதுடன் இது போல ஒவ்வொருவரும் இருந்தால் நாடு நல்லா இருக்கும் என்றார்.
வெளியே வந்த தனலெட்சுமி-மதியழகன் தம்பதி, ”அடுத்தவங்க பணம் நமக்கெதுக்குங்க. எத்தனை சிரமப்பட்டு இந்தப் பணத்தை சேர்த்திருப்பார்கள். அவர்கள் மனம் நோகக்கூடாது” என்று சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு சென்றனர். உலக மகளிர் தினத்தில் தனலெட்சுமியின் நேர்மையைப் பாராட்டாதவர்கள் யாருமில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)