/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fraud-in_23.jpg)
தர்மபுரி நகரப்பகுதியைச் சேர்ந்தவர் ஜான்(45). குளிர்சாதன இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறார். இவர், செப். 4ம் தேதி தனது மகன், மகளுடன் மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது: தர்மபுரி நகரில் எனக்குச் சொந்தமான வீடு, கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் வரும் வாடகை வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தேன். எனக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டோம்.
இந்நிலையில், பன்னிகுளத்தைச் சேர்ந்த புனிதா என்பவர் அறிமுகம் ஆனார். அவர் எனது வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த வங்கியில் கடன் பெற்று, சொந்தமாக நர்சரி தொழில் செய்ய உள்ளதாகவும், வங்கி மேலாளரிடம் பரிந்துரை செய்து கடன் பெற்றுத் தருமாறும் உதவி கேட்டார்.
நானும் வங்கி மேலாளரிடம் கூறி, கடன் கிடைக்க உதவி செய்தேன். இதன்மூலம் எங்களுக்குள் நட்பு மேலும் நெருக்கமானது. பின்னர் நான் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அவரும் கணவரைப் பிரிந்துதான் வாழ்ந்து வந்தார்.
இதன் பிறகு, எனது மகன், மகள், புனிதா மற்றும் அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டு மகன்கள் என அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தோம்.
இந்நிலையில், எனது பூர்வீக சொத்தை விற்றதன் மூலம் எனக்கு கணிசமான பணம் கிடைத்தது. அப்போது புனிதா சொன்னதன் பேரில், நாங்கள் கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தோம். மேட்டுப்பாளையம் பகுதியில் அவர் பெயரில் 1.05 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்தேன். மேலும், நகைகள், கார் ஆகியவையும் அவருக்கு வாங்கிக் கொடுத்தேன்.
இவ்வளவு செய்த பிறகும் புனிதா என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்தோம்.
இது ஒருபுறம் இருக்க, தர்மபுரி நகரில் என் பெயரில் உள்ள வீட்டை புனிதா தன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்கும்படி வற்புறுத்தினர். இதற்காக அவரும், அவருடைய மகன்களும் என்னை அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்து, அங்கிருந்து கிளம்பி மீண்டும் தர்மபுரிக்கே வந்துவிட்டேன்.
என்னை ஏமாற்றி வாங்கிய 40 பவுன் நகைகள், 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை புனிதாவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு ஜான் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தும்படி காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)