Advertisment

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; லஞ்ச ஒழிப்பில் சிக்கிய பெண் எஸ்.ஐ!  

Woman SI Arrested by anti - bribe police

Advertisment

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 2023ல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது அந்த வழக்கின் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மசாஜ் சென்டர் நடத்திவரும் பெண்ணுக்கு சாதகமாக முடித்து தருவதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக எஸ்.ஐ. ரமா கேட்டுள்ளார். ஆனால், அந்த மசாஜ் சென்டர் பெண் உரிமையாளர், ஏற்கனவே தன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தன்னால் தற்போது கடை நடத்த இயலாததாலும் பத்தாயிரம் தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.ஐ. ரமா, ‘அட்வான்ஸாக ரூ. 3,000 மட்டும் தற்போது கொடுத்தால், உனது வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும்’ என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மசாஜ் சென்டர் பெண் உரிமையாளர், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இரசாயனம் தடவிய நோட்டை மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதனை எஸ்.ஐ.யிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர்.

Advertisment

அதனை ஏற்று அந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் அந்தப் பணத்தை எஸ்.ஐ. ரமாவிடம், இன்று (17ம் தேதி) காலை சுமார் 11 மணி அளவில் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் கொண்ட குழுவினர் எஸ்.ஐ. ரமாவை கையும் களவுமாக பிடித்தனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், எஸ்.ஐ. ரமா, பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார். திருச்சி மாநகரத்தை பொறுத்தவரையில் 60 ஸ்பா சென்டர்கள் இயங்கி வருகின்றன. ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எஸ்.ஐ. ரமா கூகுள் பே மூலம் தன் வங்கிக் கணக்கில் பெற்று வருகிறார். லஞ்சமாக பெறும் இந்தத் தொகையை ரமா, மாதாமாதம் தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது என்று சொல்கின்றனர். மேலும் எஸ்.ஐ. ரமா, உயர் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்பது குறித்து விசாரித்து வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe