Skip to main content

நகை, பணத்துடன் சுருட்டும் பெண், கணவர் கைது! 

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

 

 

Woman rolling with jewelry, money, husband arrested!


சேலம் அருகே, போலி திருமணங்கள் மூலம் கணவர் வீட்டில் இருந்து நகை, பணத்தைச் சுருட்டிச் சென்ற பெண் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் தீபன் (வயது 23). மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கு முகநூல் மூலம் கவுசல்யா என்கிற சரண்யா என்ற இளம்பெண் அறிமுகம் ஆகியுள்ளார். 

 

இருவருக்கும் அலைபேசியில் ஆரம்பமான நட்பு, பின்பு காதலாக மலர்ந்தது. இந்நிலையில் கடந்த மே 25- ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். பெண் வீட்டார் தரப்பில் அவருடைய தாய் மாமன் என்று கூறிக்கொண்ட ரகுவரன் என்பவர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். 

 

இவர்களின் திருமண பந்தம் ஒரு மாதம் காலம் சுமூகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த 30 பவுன் நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் சுருட்டிக்கொண்டு சரண்யா திடீரென்று ஓட்டம் பிடித்தார். 

 

அதிர்ச்சி அடைந்த தீபன், இதுகுறித்து ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதல்கட்ட விசாரணையில் சரண்யாவும், ரகுவரனும் சமூக வலைத்தளங்கள் மூலம் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வலைவிரித்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு, ஓரிரு மாதத்தில் புகுந்த வீட்டில் இருந்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடிப்பதையே தொழிலாக வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

 

அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நாமக்கல் நடராஜபுரத்தில் வைத்து சரண்யா (வயது 34), ரகுவரன் (வயது 32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தீபன் வீட்டில் திருடிச்செல்லப்பட்ட 30 பவுன் நகைகளில் 15 பவுன் நகைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

 

பிடிபட்ட சரண்யாவின் சொந்த ஊர், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி ஆகும். அவருடைய உண்மையான பெயர் அருள்ஜோதி. இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு உறவினர்கள் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் விபச்சார கும்பலுடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த கும்பலுடனும் சரண்யா சுற்றி வந்துள்ளார். 

 

இந்த நிலையில்தான் நாமக்கல்லைச் சேர்ந்த ரகுவரனை, அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர் அவர்கள் இருவரும் கோவை மாவட்டம் வீரகேரளத்தில் வசித்து வந்துள்ளனர். அங்கிருந்தபோதுதான் அவர்கள் இருவரும், போலி திருமணங்களை செய்து பணம் சுருட்டும் வேலைகளை தொடங்கியுள்ளனர். 

 

அதையடுத்து சென்னையைச் சேர்ந்த ஒருவரை முகநூல் மூலம் வலை விரித்துப் பிடித்துள்ளனர். அவரை திருமணம் செய்து கொண்ட சரண்யா, அவரிடம் இருந்து கணிசமான பணத்தைக் கறந்து கொண்டு கம்பி நீட்டியுள்ளார். அதன்பிறகு, ஆத்தூர் தீபனை திருமணம் செய்து, நகை, பணத்துடன் தப்பிச்சென்ற போதுதான் காவல்துறையில் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது நாமக்கல் மாவட்டத்தில் இதேபோன்ற போலி திருமண மோசடி வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

 

பிடிபட்ட இருவரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சரண்யாவை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், ரகுவரனை சேலம் மத்திய சிறையிலும் காவல்துறையினர் அடைத்தனர். 

 

நாமக்கல் மாவட்டத்தில் இதேபோல ஒரு கும்பல் 12 போலி திருமணங்களை நடத்தி நகை, பணத்தை சுருட்டிச்சென்ற சம்பவத்தின் பேரில் சமீபத்தில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரை பரமத்தி வேலூர் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். அந்த சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் மேலும் ஒரு கல்யாண மோசடி சம்பவத்தில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்