/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2648.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்(25). இவர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். மகேஸ்வரன், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் மிகவும் நெருங்கிப்பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவி, மகேஸ்வரனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால், மகேஸ்வரன் மாணவியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து மாணவி தனது உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் மகேஸ்வரனிடம் பேசியுள்ளனர். அப்போதும் அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மாணவி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகேஸ்வரன் ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் மகளிர் போலீசார் மகேஸ்வரனை கைது செய்து விசாரணை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணை முடிவடைந்து பொறுப்பு நீதிபதி சாந்தி, மகேஸ்வரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மகேஸ்வரனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)