
நெய்வேலி ஜெயராம் நகர் நூர்முகமது என்பவரது மனைவி யாஷிகாபானு. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டு திருச்சியில் இருந்து அரசு பேருந்து மூலம் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் தான் கொண்டுவந்த பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்றபிறகுதான் தன்னுடைய பையை பேருந்திலேயே விட்டுவிட்டேன் என்பதே அவருக்கு தெரியவந்துள்ளது. அந்த பையில் 5 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த யாஷிகாபனு தனது கணவரை அழைத்துக்கொண்டு வடலூர் அரசு பேருந்து பணிமனைக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது வடலூரில் யாரும் இறங்கவில்லை என்றும், குறிஞ்சிப்பாடியில்தான் 10 பேர் பேருந்தில் இருந்து இறங்கியதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் சென்று புகார் அளித்த நிலையில், அதே பேருந்தில் பயணித்த ராமதாஸ் மனைவி கௌசல்யா என்பவர் பேருந்தில் நகையுடன் கிடந்த பையை எடுத்துவந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை நகை யாஷிகா பானுவுடையது என்பதை உறுதி செய்த போலீசார் அவரிடம் நகை பையை ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து பேருந்தில் கிடந்த பையை எடுத்துவந்த கௌசல்யாவை நேரில் அழைத்து காவல் ஆய்வாளர் ராஜதாமர பாண்டியன் மற்றும் காவலர்கள் பாராட்டினர்.