Woman passes away police investigation in erode

ஈரோடு மாவட்டம், பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பவானி அருகே உள்ளது லட்சுமி நகர் பகுதி. இங்கு கே.கே. நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஓய்வுபெற்ற தனியார் கல்லூரி பேராசிரியர். இவரின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனியே வாழ்கின்றனர். கணேசன் தனது மனைவி வளர்மதியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கணேசன் 20ந் தேதி காலையில் அருகில் உள்ள பவானி நகரத்திற்கு சென்றுள்ளார்.

Advertisment

இதனால் வீட்டில் வளர்மதி மட்டும் தனியாக இருந்துள்ளார். கணவன் வெளியே போன சிறிது நேரத்தில் அவரது வீட்டிலிருந்து அழுகுரலும் கதறல் சத்தமும் கேட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு போய் பார்த்தபோது, வளர்மதி ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். இதன் பின்னர் அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. மற்றும் போலீசார் உயிரிழந்த வளர்மதியின் உடலில் இருந்த கைரேகையை தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.

இதன் பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வளர்மதி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க நகைக்காக யாரோ மர்ம நபர்கள் இப்படிப்பட்ட கொலையை செய்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் இப்படி ஒரு பெண் கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.