Woman passes away near kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (35). இவரது மனைவி திலகவதி (30). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் (02.10.2021) முருகன், அவரது மனைவி திலகவதி ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான வயலை பார்ப்பதற்குச் சென்றுள்ளனர். பிறகு திலகவதி மட்டும் முன்கூட்டியே வீட்டுக்குத் திரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

அப்படி முன்னதாக வீடு திரும்பிய திலகவதி, வீட்டுக்கு வந்து சேராததால், அவரின் உறவினர்கள் பதற்றம் அடைந்து பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் திலகவதி கிடைக்கவில்லை. இதையடுத்து, திருநாவலூர் காவல் நிலையத்தில் திலகவதியின் கணவர் முருகன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் திலகவதியை தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கிவிட்டனர்.

Advertisment

ஒருபுறம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவர, அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் திலகவதி சடலமாக மிதப்பதாக அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் பார்த்து, திலகவதி குடும்பத்தினருக்குத் தகவல் அளித்துள்ளனர். மேலும், அதுகுறித்த தகவல் திருநாவலூர் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விரைந்து வந்து திலகவதியின் உடலை கிணற்றிலிருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து திலகவதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து திலகவதி மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். திலகவதியை மர்ம நபர்கள் கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா? அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அவர் கிணற்றில் சடலமாக மிதந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisment