Woman passes away in Mystery way at Attur hotel

ஆத்தூரில் தனியார் தங்கும் விடுதியில் கழுத்தை நெரித்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டையில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு நவ. 17ஆம் தேதி இரவு 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், அவருடன் 25 வயதான ஒரு ஆணும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் வாடகைக்கு தங்க ஒரு அறை கேட்டனர். வழக்கமாக விடுதியில் தங்க வருவோரிடம் அடையாள அட்டை பதிவு செய்யப்படும். ஆனால், விடுதி மேலாளர் அருண், அவர்களிடம் அடையாள அட்டை பெறாமலேயே தங்குவதற்கு அனுமதித்துள்ளார்.

Advertisment

அன்று இரவு 11 மணியளவில், டிபன் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு அந்த வாலிபர், விடுதியை விட்டு வெளியே சென்றார். அதன்பின் அவர் மீண்டும் தனது அறைக்குத் திரும்பவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை (நவ. 18) காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த விடுதி மேலாளர், அந்த அறைக் கதவை தட்டிப்பார்த்தார். அப்போதும் திறக்கப்படவில்லை.

கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் இடாமல் இருந்ததால் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, படுக்கையில் அந்தப் பெண் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நாக்கு வெளியே நீண்டிருந்ததால் அவர் கழுத்து நெரிக்கப்பட்டோ அல்லது தூக்கிட்டோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் யார்?, அவருடன் வந்த வாலிபர் யார்?, விடுதி அறையில் தங்க வருவதற்கு முன்பு அவர்கள் எங்கெங்கு சுற்றினர்?, அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் அவர்கள் பதிவாகியுள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அடையாள அட்டை இல்லாமலும், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களைப் பெறாமலும் விடுதியில் தங்கவைக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் விடுதி மேலாளரிடம் விசாரணை நடந்துவருகிறது.