woman passes away by their relations son

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ளது ஆங்கியனூர். இந்த ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி, 50 வயது நிரம்பிய அமராவதி. இவர் அந்த ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் (16.05.2021) தனது வீட்டுக்கு வெளியில் அமர்ந்து சமைப்பதற்காக அரிசியை முறத்தில் போட்டு புடைத்துக்கொண்டிருந்தார். அந்த நேரம் அவரது கொழுந்தனார் சின்னத்துரை என்பவரது மகன் அசோகன் (38) அங்கு வந்துள்ளார். தனது சித்தி அமரவதியிடம் வம்பு பேசியுள்ளார். இதனால் அமராவதிக்கும் அசோகனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதில் ஆத்திரமடைந்த அசோகன் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் சித்தி அமராவதியை தலை, கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அமராவதி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவத்தைப் பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருமானூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த அமராவதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அமராவதியின் கொழுந்தன் மகன் அசோகன், தனது சித்தியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அறிந்த போலீசார் அசோகனை கைது செய்ய தேடிச் சென்றுள்ளனர். அப்போது அசோகன், தனது வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டு இறந்துபோய் கிடந்துள்ளார். விசாரணைக்குச் சென்ற போலீசார் பிணமாக கிடந்த அசோகனின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அசோகன் ஏன் இவ்வளவு கொடூர செயலை செய்தார், அதன்பிறகு அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் அப்பகுதி மக்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில், அசோகன் கடந்த 10 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதித்த நிலையில் இருந்துள்ளார் என தெரியவந்தது. மேலும் சில நேரங்களில் சுயநினைவுடன் இருப்பார், சில நேரங்களில் தன் சுய நினைவை இழந்து மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்துவார் என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Advertisment

இப்படி மனநிலை பாதிக்கப்பட்ட அசோகன் தனது சித்தி அமராவதியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். அசோகனுக்கு மனைவி, ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். அதேபோன்று அமராவதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த சித்தியை மனநிலை பாதிக்கப்பட்டவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருமானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.