Woman passed away.. shop owner surrender in court

ஈரோடு மாவட்டம், பவானி கர்ணாபுரத்தை சேர்ந்தவர் மலர் 37. இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். இவர், கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள நவநீதன் என்பவரின் செராமிக்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கு பணியாற்றி வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், கடந்த 29ம் தேதி காலை நவநீதன் வீட்டு குளியலறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் வீட்டின் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பெண் குளியலறையில் எரிந்து கொண்டிருந்தார். உடனடியாக அவர்கள், காவல்துறைக்கு தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து அந்தப் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், மே 31-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவர் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யச்சொல்லி உடலைவாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

Advertisment

இந்நிலையில், அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரிடம் போலீஸார் வாக்கு மூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தில் அவர், “ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த நவநீதன் என்பவர் நடத்தி வரும் செராமிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தேன். நவநீதன் என்னை அடிக்கடி பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததில் 6 முறை கருக்கலைப்பு செய்துள்ளேன். இது குறித்து அறிந்த அவரது மனைவி அகிலாவும் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சேர்ந்து என்னை குளியலறையில் தள்ளி தீ வைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி அந்தப் பெண் எழுதிய கடிதம் மற்றும் பதிவு செய்து வைத்துள்ள வீடியோக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் நவநீதன் மற்றும் அவரது மனைவி மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.

Advertisment

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவர்கள் இன்று மதியம் கரூர் மாவட்டம் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1, நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் சரண் அடைந்தனர்.