
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகிலுள்ளது துலுக்க நத்தம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவரது மனைவி முத்தம்மாள்(55). இவர் அப்பகுதியில் கருவாடு, மீன் போன்றவற்றை கூடையில் சுமந்து சென்று ஊர் ஊராக வியாபாரம் செய்து வந்தார். கடந்த 11ஆம் தேதி மீன் வியாபாரத்திற்குச் சென்ற முத்தம்மாள் வீடு வந்து சேரவில்லை. முத்தம்மாளைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் மீது இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்தம்மாள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் துலுக்க நத்தம் கிராமத்திலிருந்து பாக்கம் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் ஒரு கரும்புத் தோட்டம் அருகே பெண்சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது முத்தம்மாள் மீன் வியாபாரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கூடை கிடந்துள்ளது. அதனருகில் உடல் அழுகிய நிலையில் முத்தம்மாள் கிடந்துள்ளார். இறந்தது முத்தம்மாள்தான் என்பதை அவரது குடும்பத்தினர் வந்து அடையாளம் காட்டியுள்ளனர்.
அதன்பிறகு முத்தம்மாள் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு 40 வயதில் மீனா, 38 வயதில் வெள்ளையம்மாள், 32 வயதில் பாப்பாத்தி ஆகிய மூன்று மகள்களும் ராஜீவ்காந்தி என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முத்தம்மாளின் பேரக் குழந்தைகளுக்கு காதணி விழா நடந்துள்ளது. அந்த விழாவில் மூன்று மகள்களும் மகனும் சேர்ந்து 5 சவரன் தாலி சங்கிலி முத்தம்மாளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர். இது தவிர இரண்டரை சவரன் அளவிற்கு கம்மல் மற்றும் மூக்குத்தி, வெள்ளிக் கொலுசுகள் ஆகியவை அணிந்துள்ளார்.
அவர் அணிந்திருந்த நகைகள் மதிப்பு சுமார் 3 லட்ச ரூபாய் இருக்கும். அவர் மீன் வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு மாலை நேரத்தில தனது ஊருக்குத் திரும்பும்போது அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டுச் செல்வது உண்டு. அப்படி யாரிடமாவது லிப்ட் கேட்டு, அவரை வண்டியில் அழைத்துச் சென்ற மர்ம நபர்கள் நகைக்காக அவரைக் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் ஊராகச் சென்று மீன் வியாபாரம் செய்து வந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.