Woman passed away in Karur car accident

Advertisment

கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி ஸ்ரீனிவாசா நகரைச்சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சியாமளாதேவியும்(40), அவரது உறவினர் வெங்கடேஷ் என்பவரது மனைவி சித்ர(30) ஆகிய இருவரும் ஒரு ஸ்கூட்டரில் தண்ணீர்பள்ளி சென்றுவிட்டு நேற்று தேசிய நெடுஞ்சாலையில் வீட்டிற்கு மேற்கு நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம்முருங்கை கிராமம் பூட்டிபாளையத்தைச் சேர்ந்தவர்களான சஞ்சீவி(23), சுதீப்(27) ஆகிய இருவரும் காரில் குளித்தலை வழியாகத்திருச்சி சென்றுகொண்டிருந்தனர்.

காரை சஞ்சீவி ஓட்டி வந்தநிலையில் தண்ணீர்பள்ளி ஸ்ரீனிவாசா நகர் அருகே வரும்போது, டயர் திடீரென வெடித்து,வலது பக்கமாக வந்து கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது பலத்த சத்தத்துடன் மோதியதில் கார் மற்றும் ஸ்கூட்டர் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சியாமளாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்கூட்டி பின்னால் அமர்ந்து வந்த சித்ரா படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்தில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிதறிக் கிடந்துள்ளது.

அவற்றை சம்பவ இடத்திற்குச் சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாலகுமார் மற்றும் மருத்துவ உதவியாளர் சுதாகர் ஆகியோர் நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த 3லட்சத்து 83 ஆயிரத்து 370 ரூபாய் மற்றும் செல்போன்கள்,11 பேங்க் பாஸ் புத்தகங்கள், 12 ஆதார் கார்டுகள், 6க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள்ஆகியவற்றைக் கைப்பற்றி மருத்துவமனையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.காரில் வந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.