/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/poice-siren_34.jpg)
சேலத்தில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது ஏன்? என்று அவருடைய கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் தாதகாப்பட்டி வேலு நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42). சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகைசெல்வி (35). இவர், வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக். 11) தேதி இரவு அனைவரும் வழக்கம்போல இரவு உணவை முடித்துவிட்டு தூங்கச் சென்றனர். புதன்கிழமை (அக். 12) அதிகாலை 3 மணியளவில், கார்த்திகைசெல்வியின் மகள் தூக்கம் கலைந்து எழுந்துள்ளாள். அப்போது படுக்கையில் தனது தாயார், முகத்தில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார்.
தாயார் மூச்சுப் பேச்சின்றி அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்து சிறுமி அதிர்ச்சி அடைந்தாள். தந்தையும் வீட்டில் இல்லை. கதவு திறந்த நிலையில் இருந்தது. இதையடுத்து கீழ் தளத்தில் வசித்து வரும் சித்தப்பா நாகராஜனை எழுப்பி, தாய் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கூறினாள். நாகராஜன் மேல் தளத்தில் சென்று பார்த்தபோது, அங்கே கார்த்திகைசெல்வி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். கார்த்திகை செல்வியின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜசேகரன்தான் மனைவியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. நிகழ்விடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
மேலும், குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்த நிலையில், ராஜசேகரன் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் சென்னைக்கு விரைந்தனர். அங்கு ஓரிடத்தில் பதுங்கி இருந்த ராஜசேகரனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
காவல்துறையில் ராஜசேகரன் அளித்துள்ள வாக்குமூலம்: ''என் மனைவி கார்த்திகைசெல்வி குடும்பம் நடத்த பணம் கேட்டு அடிக்கடி நச்சரித்து வந்தார். எனக்கு சம்பளம் குறைவாக உள்ளதால் அவர் எதிர்பார்த்த பணத்தைத் தர முடியவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு கார்த்திகைசெல்வி ஆபாச வார்த்தைகளால் திட்டினாள். இரவு நேரத்தில் அவள் சத்தம் போட்டு திட்டியதால் எனக்கு அவமானமாக இருந்தது. அக்கம்பக்கத்தில் பலருக்கும் கேட்கும்படி திட்டினாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவளை இரும்பு கம்பி, மரக்கட்டையால் அடித்துக் கொன்றேன்'' என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)